அரசியல்

"ரூ.50-க்குதான் முடி வெட்டிக் கொள்வேன்.." கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சுக்கு பாஜக சாடல்!

By Christon
26 Aug 2026, 07:58 PM
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சுக்கு அம்மாநில பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
தான் இப்போதும் ரூ.50 செலுத்தியே முடி வெட்டிக் கொள்வதாகவும், எளிய வாழ்க்கையையே விரும்புவதாகவும் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தனியார் ஊடகத்தின் நேர்காணலில் பங்கேற்ற போது அவர் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

நேர்காணலின் போது, டெல்லியில் உள்ள தனது பழைய பகுதி சலூனிலேயே முடி வெட்டச் சென்ற சுவாரஸ்யமான சம்பவத்தை ஊடகவியலாளர் சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலளித்த டி.கே.சிவகுமார், தான் இன்னமும் ரூ.50 மட்டுமே முடி வெட்டுவதற்காகச் செலவழிப்பதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் எளிய வாழ்க்கையையே விரும்புகிறேன். நண்பர்கள் பலர் லூயிஸ் விட்டான் (Louis Vuitton) போன்ற விலையுயர்ந்த ஆடைப் பொருட்களைப் பரிசாக அளிக்கிறார்கள். அதைத் தவிர்க்க முடியாது. ஆனால் எளிய முறையில் வாழ்வதே அடிப்படை நாகரிகம்" என்று தன் வாழ்வியல் குறித்துக் குறிப்பிட்டார்.

டி.கே.சிவகுமாரின் இந்த எளிய வாழ்க்கை பேச்சைக் கர்நாடக மாநில பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. 2023 சட்டமன்றத் தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த சொத்து பிரமாணப் பத்திரத்தின்படி, அவருக்கு ரூ.1,400 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன.

இதனைச் சுட்டிக்காட்டிய பாஜக, "ரூ.50 முடி திருத்தம் = எளிய வாழ்க்கை. அதேநேரம் ரோலக்ஸ் கடிகாரம், லூயிஸ் விட்டான் துண்டு, கார்டியர் கடிகாரம் = இதுவும் எளிய வாழ்க்கையாம்!" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ரூ.1,400 கோடி சொத்து வைத்துக்கொண்டு எளிய வாழ்க்கை என்று கூறுவது போலித்தனத்தின் உச்சம் என்றும் பாஜக சாடியுள்ளது.