அரசியல்
"பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை"- திருமாவளவன் விளக்கம்!
தவெக அமைச்சரவையில் விசிக இணைந்துள்ளதற்கு பதவி ஆசை காரணம் இல்லை என்று திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
பதவி ஆசையில் நாங்கள் தவெக அமைச்சரவையில் இணையவில்லை என்று மு.க. ஸ்டாலினுக்குத் தெரியும்" என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், எங்களுடைய அரசியல் தூய்மையை களங்கப்படுத்துவது திட்டமிட்ட அவதூறு என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "அமைச்சரவையில் இடம்பெற தவெக எங்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை தவிர்க்கக் கூடாது என்று கட்சியின் நலன்களை கருத்தில் கொண்டு, அந்த நிலைப்பாட்டுக்கு நான் இணங்கும் சூழல் உருவாகியது. தமிழ்நாட்டின் அரசியல் நெருக்கடியால் தவெகவுக்கு ஆதரவு தர முடிவு எடுத்தோம். மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தபோது இதனை தெரிவித்தோம்.
நான் அமைச்சராக வேண்டும் என்று எங்களுடைய கட்சியினரும் தவெக தரப்பினரும் கூறினார்கள். ஆனால் நான் அதற்கு இணங்கவில்லை. அமைச்சரவையில் இடம்பெறுவது உறுதிபடுத்தப்பட்டபோது வன்னி அரசை பரிந்துரைப்பதே சரி என முடிவு செய்தேன்.
நான் சர்வாதிகாரி இல்லை. ஜனநாயகவாதி. திமுக கூட்டணிக்கு நாங்கள் உறுதியுடன் இருந்ததை போகிற போக்கில் விமர்சிக்கக் கூடாது. 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்கிற எங்கள் முழக்கத்தைதான் கட்சியினர் வலியுறுத்தினர்.
தேர்தலுக்கு முன்பு என்னை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி திமுக கூட்டணியை சிதறடிக்க பலர் முயற்சித்தார்கள். என்னை குறிவைத்து திட்டமிட்டு அவதூறு பரப்பினார்கள். ஆனால் அதற்கு நாங்கள் இடம்தரவில்லை. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எந்தளவுக்கு உறுதுணையாக இருக்க முடியுமோ அந்த அளவுக்கு நான் இருந்துள்ளேன்.
தவெகவுக்கு ஆதரவு என கூட்டணி காட்சிகள் எடுத்த முடிவில் தலைமையிட எனக்கு வலிமையில்லை. தேர்தலுக்குப் பின்பும் திமுக கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நான் என்ன கூட்டணியின் தலைவரா?
நாங்கள் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக உயர்நிலைக்குழுவில் ஆலோசித்து திமுக தலைவரிடம் தெரிவித்த பிறகே தவெகவுக்கு ஆதரவு தர முடிவெடுத்தோம். முடிவெடுக்க, எங்களுக்குத் தேவையான கால அவகாசத்தை நாங்கள் எடுத்துக்கொண்டோம். நிதானமாக நாங்கள் முடிவெடுத்தோம்.
பதவி ஆசையில் நாங்கள் தவெக அமைச்சரவையில் இணையவில்லை என்று மு.க. ஸ்டாலினுக்குத் தெரியும். எங்களுக்கும் திமுகவுக்கும் கொள்கைப் புரிதல் உள்ளது. மு.க. ஸ்டாலினின் வாழ்த்துகளோடு, ஆதரவோடு இசைவோடுதான் தவெகவுக்கு ஆதரவு என்ற முடிவைத் தெரிவித்தோம். எங்களுடைய அரசியல் தூய்மையை களங்கப்படுத்துவது திட்டமிட்ட அவதூறு.
தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. ஆனால் அதைத் தாண்டி கட்சியின் உறுப்பினர்கள் யோசிக்கும்போது கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டியது என் கடமை. தலைவராக மட்டுமின்றி உறுப்பினராக நான் அந்த முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். காலத்தின் கட்டாயத்தால் இந்த ஆட்சி ஏற்பட்டுள்ளது.
தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்புகின்றனர் என்று ஏற்கெனவே நான் அறிக்கையில் கூறியிருந்தேன். தற்போது நிலவும் நெருக்கடியால் இந்த முடிவை எடுத்தோம் என்பதை ஸ்டாலின் அறிவார். ஆனால் சமூக வலைதளங்களில் என்னை மட்டுமே குறிவைப்பது ஏன் என புரியவில்லை" என்று பேசினார்.
மேலும், அடுத்து வரும் தேர்தல்களில் தவெகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு தற்போது அதைப்பற்றி பேச வேண்டாம் என அவர் கூறினார்.
முன்னதாக திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவளித்த நிலையில், 2029 மக்களவை தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.