தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 8 ஆணவக்கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள மனித உரிமை வழக்கறிஞர் ஆளூர் ஷா நவாஸ், ஆணவக்கொலை தடுப்புக்கான தனிச்சட்டத்தை தவெக அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிபதி கே.என். பாஷா தலைமையிலான ஆணையத்தை தாங்கள் இரண்டு முறை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். முதல் முறையாக, கடந்த மார்ச் 18 அன்று எவிடென்ஸ் கதிர் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் ஆணையத்தின் முன் ஆஜராகி, ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தின் அவசியம் குறித்து விரிவான ஆவணங்களை சமர்ப்பித்ததாக கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் ஜுன் 25 அன்று ஆணவக்கொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் மீண்டும் ஆணையத்தை சந்தித்து, பாதிக்கப்பட்டோரின் கோரிக்கைகள் மற்றும் தனிச்சட்டத்தின் அவசியம் குறித்து வலியுறுத்தி மனு அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இரண்டு சந்திப்புகளுக்கும் இடைப்பட்ட வெறும் 3 மாத காலத்தில் தமிழ்நாட்டில் 8 ஆணவக்கொலைகள் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த நிலைமை உடனடி சட்ட நடவடிக்கையின் அவசியத்தை உணர்த்துவதாக கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் ஆணவக்கொலை தடுப்புக்கான தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை நினைவூட்டிய ஆளூர் ஷா நவாஸ், அந்த உறுதியை நடைமுறைப்படுத்த வேண்டிய நேரம் இது என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, நீதிபதி கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையை விரைந்து பெற்று, அதன் அடிப்படையில் ஆணவக்கொலை தடுப்புக்கான தனிச்சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
தென்மாவட்டங்களில் தொடர்ந்து அரங்கேறும் ஆணவக்கொலை சம்பவங்கள் சமூக அக்கறையை அதிகரித்துள்ள நிலையில், ஆளூர் ஷா நவாஸின் இந்தக் கோரிக்கை அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.