மார்ச் 15 வருடங்களுக்கு முன்பு மதுரையை சுற்றியுள்ள கிரானைட் குவாரிகளில் ஆய்வு செய்து அபராதம் விதித்த தொகை மட்டுமே கிட்டத்தட்ட 13,000 கோடி ரூபாய். தாதுமணல் கொள்ளைக்கு விதித்த அபராதம் 5,832 கோடி ரூபாய். இவை எல்லாம் அங்குள்ள கிரானைட் குவாரி முதலாளிகளிடம் வசூல் செய்யப்படாமல் முடங்கிக் கிடக்கிறது. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க, அரசு, சுமார் 10 லட்சம் கோடி கடன் சுமையோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. இந்த அபராத பணத்தை வசூலித்தாலே மொத்தக் கடனையும் அடைத்துவிடலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசினார் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எட்டிமங்களம் ஸ்டாலின். "மதுரை மாவட்ட கலெக்டராக சகாயம் இருந்தபோது, 'கிரானைட் கொள்ளை ஒரு லட்சம் கோடி' என அறிக்கை தாக்கல் செய்தார். அதை எதிர்த்து கிரானைட் குவாரி உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதன்பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அறிக்கையும் சமர்ப்பித்தனர். ஆனால், அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மதுரை மாவட்டத்தில் மட்டும் கிரானைட் குவாரி கொள்ளைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம் 13,132 கோடியே 43 லட்சம் ரூபாய். அதேபோல தாதுமணல் கொள்ளைக்கு 5,832 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டதையடுத்து அரசியல் பிரமுகர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என அனைவருக்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்து சரிக்கட்டியது கிரானைட் கும்பல், மதுரை மாவட்டத்தில் மட்டும் 84 குவாரிகள் கனிமவள சட்டத்திற்கு புறம்பாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளன.
இதனால் ஒவ்வொரு குவாரிக்கும் கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் தாதுமணல் கொள்ளைக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதத்தைவிட இது மூன்று மடங்கு அதிகம். கடந்த 15 வருடங்களாக இந்த அபராதத் தொகையை வசூலிக்காமல் அதிகாரிகள் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திவருகின்றனர்.
இதற்கு உடந்தையாக இருந்த கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றவர், "இந்த விவகாரத்தில் கிரானைட் குவாரி உரிமையாளர்களுக்கு தொடர்புடைய எந்தவொரு இடத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தவில்லை. பி.ஆர்.பி. பெயரில் மட்டும் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மேலூரில் வாங்கப்பட்டுள்ளன. இது நில உச்சவரம்பு சட்டத்தின்படி தவறு.
கிரானைட் குவாரிக்காக 34 கண்மாய்கள் காணாமல் போயிருக்கின்றன. பி.ஆர்.பி நிர்வாகம் 55 ஏக்கர் நிலத்தில் விதி மீறிய குவாரியும், அரசு ஒப்பந்தம் இல்லாத 10 குவாரிகளையும், பாதுகாப்பு இல்லாத 65 குவாரிகளையும் இயக்கியதால் அவர்களது கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் பி.ஆர்.பி. ஆனால் அங்கு அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
மதுரையில் மட்டுமே இந்த மோசடி தருமபுரி, கணக்கிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, கரூர், புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் விதிமீறலுக்கான அபராதத் தொகையை கணக்கிட்டால் லட்சம் கோடியை தாண்டும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் கிரானைட் கற்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதில் நடைபெற்ற மோசடிகளை கண்டறிய அமலாக்கத்துறையால் மட்டுமே முடியும். இவ்வளவு மோசடிகளுக்குப் பிறகும் டாமின் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குவாரிகளில் தனியார் ஆட்கள் கற்களை வெட்டி எடுத்து அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறார்கள். அதற்கும் அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.
சீல் வைக்கப்பட்டிருக்கும் கிரானைட் கற்களை அரசு விரைவில் ஏலத்திற்கு கொண்டு வரவேண்டும். இதன் மூலம் அரசிற்கு சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். பி.ஆர்.பியின் மைத்துனர் கோட்டை வீரன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒலிம்பஸ், பி.ஆர் உள்ளிட்ட குவாரிகளில் விதிக்கப்பட்டுள்ள அபராதம் மட்டுமே சுமார் 13 ஆயிரம் கோடியை தாண்டியிருக்கிறது. விதிமீறிய குவாரிகள்மீது புதிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதம் செய்தால் சீல் வைக்கப்பட்ட கிரானைட் கற்களுக்கு பதிலாக கழிவு கற்களை கணக்கில் காட்டும் ஆபத்தும் உள்ளது.
கிரானைட் குவாரிகளில் நடைபெற்றுவரும் சட்டவிரோதச் செயல்களை தடுக்க, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு தமிழகத்தில் ஆய்வு செய்யவேண்டும். 1999ம் ஆண்டு கனிமவள சட்டப்படி குத்தகைக்கு எடுக்கப்பட்ட குவாரிகளில் கற்களை வெட்டி எடுத்த பிறகு அந்த நிலத்தை பழைய நிலைக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஆனால், எந்த குவாரி உரிமையாளரும் அதை செய்வதில்லை. அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. மதுரை மேலூர், கீழவளவு, கொட்டாம்பட்டி, ஒத்தக்கடை ஆகிய ஊர்களில் மட்டும் இதுபோன்ற 150 குற்ற வழக்குகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து மைன்ஸ் அலுவலகத்தில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த வழக்குகளை தமிழக அரசு விரைவில் நடத்தி முடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
சர்வே செய்து சீல் வைக்கப்பட்ட கிரானைட் கற்கள் அனைத்தும் மறு ஆய்வு செய்ய வேண்டும். தற்போதைய கனிமவளத்துறை அமைச்சரின் ரத்த உறவு மூலமாக கிரானைட் முதலாளிகள் ரகசிய மூவ்கள் என்றார் விரிவாக.
இதுகுறித்து கனிமவளத்துறை அமைச்சர் பிரபுவிடம் கேட்டோம். "மதுரை மாவட்டத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ள குவாரிகளிடம் இருந்து அபராதத் தொகையை விரைவில் வசூலிக்க வேலைகள் நடந்துவருகின்றன" என்றார். புதிய அரசின் அதிரடி நடவடிக்கைகள் குவாரி கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்குவதாக இருக்க வேண்டும்.