அரசியல்

எம்ஜிஆர் மாளிகை டூ பனையூர்.. எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தனர்!

By Christon
02 Jul 2026, 12:03 PM
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் இன்று தவெகவில் இணைந்தனர்.
அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் இன்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த மாபெரும் மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது. தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் இந்த விழா மிக பிரமாண்டமாக அரங்கேறியது. விழாவில், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுக்குக் கட்சியின் துண்டை அணிவித்து அன்போடு வரவேற்றார்.

இந்த விழாவில் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் சேர்த்து, திருச்சியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, திருப்பூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோரும் தவெகவில் இணைந்தனர்.

மேலும், முன்னாள் எம்.எல்.ஏ.க்களான மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர்), எம்.ராம்குமார் (கும்பகோணம்), ராஜவர்மன் (திருச்சுழி), சதன்பிரபாகர் (பரமக்குடி), திருஞானசம்பந்தம் (பேராவூரணி) மற்றும் மாவட்ட செயலாளர்களான பி.கே.வைரமுத்து (புதுக்கோட்டை), இளம்பை தமிழ்செல்வன் (பெரம்பலூர்), ஒரத்தநாடு மா.சேகர் (தஞ்சை), சீனிவாசன் (திருச்சி) உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், 208 ஒன்றிய செயலாளர்களும் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்த பிரமாண்ட இணைப்பு விழாவில் பங்கேற்பதற்காகக் கரூர், புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்னை நோக்கிப் படையெடுத்தனர். சுமார் 200 பஸ்கள் மற்றும் 600 கார்கள் மூலம் 15,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாமல்லபுரத்திற்குத் திரண்டு வந்ததால், அந்தப் பகுதியே தவெக தொண்டர்களால் விழாக்கோலம் பூண்டிருந்தது. அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகள் சரிந்து தவெகவில் இணைந்து வருவது அதிமுக தலைமைக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.