Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ உயிரிழப்பு: சசிகலா- அண்ணாமலை இரங்கல்

By MUTHUKRISHNAN
09 Jun 2025, 11:33 AM
திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ குணசேகரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவினைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, சசிகலா ஆகியோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் குணசேகரன். 58 வயதான இவர் அதிமுகவின் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவை தனியார் மருத்துவமனையில் குணசேகரன் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி இன்று இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார். இவருக்கு ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள். கடந்த 2001 முதல் 2006 வரை திருப்பூர் நகராட்சி கவுன்சிலராக இருந்த குணசேகரன், 2011 முதல் 2016 வரையிலான காலத்தில் திருப்பூர் மாநகராட்சி துணை மேயராகவும் பதவி வகித்துள்ளார். 2016 முதல் 2021 வரை திருப்பூர் தெற்கு தொகுதியின் எம்எல்ஏவாக செயல்பட்டு வந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில், திமுக வேட்பாளரை 15,933 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட நிலையில், 4,709 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.

தற்போது மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த குணசேகரனது உடல் மதியம் 12 மணிக்கு திருப்பூர் ராக்கியபாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. குணசேகரன் மறைவினத் தொடர்ந்து அதிமுக கழக நிர்வாகிகள், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சசிகலா ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது இரங்கல் செய்தியில், ”திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர், S. குணசேகரன் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.


சசிகலா தனது இரங்கல் பதிவில், ”திருப்பூர் தெற்கு தொகுதி, கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். குணசேகரன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.