அரசியல்

'துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் உற்சாகம்!' - அதிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

By Sumalekha
01 Jul 2026, 03:02 PM
அதிமுகவில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் சூழலில், "துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் இருக்கிறார்கள்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் சூழலில், "துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் இருக்கிறார்கள்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுக போன்ற ஜனநாயக முறையில் இயங்கும் இயக்கம் தமிழகத்தில் வேறு எதுவும் இல்லை. பல்வேறு சாதி, மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே குடும்பமாக இணைந்து செயல்படுவது அதிமுகவின் பலம். அரை நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "கட்சியை விட்டு துரோகிகள் வெளியேறி வருவதால் அடிமட்டத் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இரட்டை இலை சின்னத்தில் மக்கள் வாக்களித்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களை பதவி விலகச் செய்து, சிலர் தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்கின்றனர். மக்களுக்காக களத்தில் நின்று போராடாமல் சிலர் ஆட்சிக்கு வந்துள்ளனர்" என்று விமர்சித்தார்.

மேலும், வரும் தேர்தல்களை மனதில் கொண்டு மகளிரணி நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்றும், அவர்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகிய நிலையில், எடப்பாடி பழனிசாமியின் "துரோகிகள்" குறித்த கருத்து அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதேநேரத்தில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்காததும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது மீண்டும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.