அரசியல்

தேர்தல் வழக்குகள்: முதலமைச்சர் விஜய் தரப்பு கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

By Christon
12 Aug 2026, 03:54 PM
தேர்தல் வழக்குகள் தொடர்பாக முதல்வர் விஜய் தரப்பு கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
தனக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாக, முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளில் பதில்மனு தாக்கல் செய்ய முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் ஜி.மாசிலாமணி மற்றும் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், முதல்வருக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதால் 4 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதற்குள் நிராகரிக்கக் கோரும் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

இதேபோல், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கையும் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.