அரசியல்

தேர்தல் 2026: உதயநிதி மற்றும் விஜய் இன்று வேட்புமனு தாக்கல்!

By Christon
02 Apr 2026, 12:58 PM
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் இன்று தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முக்கியத் தலைவர்களான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோர் இன்று தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, முக்கிய அரசியல் பிரமுகர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் தொகுதியில் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். கடந்த 2021 தேர்தலில் இதே தொகுதியில் சுமார் 93 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற அவர், இந்த முறையும் அங்கேயே களம் காண்கிறார். இவருக்கு எதிராக அதிமுகவின் ராஜாராம், நாம் தமிழர் கட்சியின் ஆயிஷா பேகம் மற்றும் தவெக-வின் டி. செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருச்சியில் தவெக தலைவர் விஜய்

சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஏற்கனவே பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற அவர், திருச்சி மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

பாதுகாப்பு மற்றும் பிரச்சார மாற்றங்கள்

முன்னதாக, பெரம்பூர் மற்றும் கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, பாதுகாப்பு கருதி வில்லிவாக்கம் மற்றும் அண்ணாநகர் பிரச்சாரங்கள் தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டன. இடையில் வந்த விடுமுறை நாட்களுக்குப் பிறகு, இன்று முறைப்படி திருச்சி கிழக்குத் தொகுதியில் தனது மனுவைத் தாக்கல் செய்துள்ள விஜய், அங்குத் தனது பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார்.