அரசியல்

"கூட்டணிக்காக விஜய் வீட்டுக் கதவை தட்டினார் எடப்பாடி பழனிசாமி"- ஓபிஎஸ் கடும் தாக்கு!

By Christon
21 Mar 2026, 11:54 AM
"கூட்டணிக்காக விஜய் வீட்டுக் கதவை எடப்பாடி பழனிசாமி தட்டினார்" என்று ஓ பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து முன்வைத்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் தற்போதைய நிலை மற்றும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிப் பேசினார்.

அதிமுகவின் பின்னடைவும் கூட்டணி குழப்பங்களும்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கட்சியையே அசிங்கப்படுத்திக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட ஓபிஎஸ், இவர்களை நம்பி மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் எனக் கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைக்க இடம்தேடி அலைவதாகவும், தவெக தலைவர் விஜய்யின் வீட்டின் கதவைத் தட்டியபோது அவர் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் விமர்சித்தார். அதிமுகவை உதயகுமார் மற்றும் பழனிசாமி ஆகியோர் இணைந்து குழிதோண்டிப் புதைத்துவிட்டதாக அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

ஸ்டாலின் ஒரு மக்கள் முதல்வர்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைவரையும் அரவணைத்துத் திறம்பட ஆட்சி நடத்தி வருவதாக ஓபிஎஸ் புகழாரம் சூட்டினார். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் திகழ்வதாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒரு 'நாமினி' முதலமைச்சர் மட்டுமே என்றும் அவர் சாடினார்.

மீண்டும் ஸ்டாலின் ஆட்சி

தமிழகத்தின் அனைத்துத் திட்டங்களும் மக்களைச் சென்றடையும் வகையில் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மு.க. ஸ்டாலினே முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று தெரிவித்தார்.