Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

தவறாமல் படத்தை பாருங்க.. பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்

By Jayakumar
09 Jun 2025, 08:00 AM
சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள 'படைத்தலைவன்' படத்தில் விஜயகாந்தை AI தொழில்நுட்பத்தில் நடிக்க வைத்திருப்பதாகவும் திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் நேற்று (ஜூன் 8) நடைபெற்ற தேமுதிக நிர்வாகி ரவி என்பவரது இல்ல திருமண விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மேடையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "33 ஆண்டுகளாக விஜயகாந்தும் நானும், அவர் வேற நான் வேற என்று வாழ்ந்தது கிடையாது. சொல்,செயல் என்று ஒன்றாக இருந்தோம் அந்த மன ஒற்றுமை இருந்தால் போதும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்" என்று மணமக்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடந்து பேசிய அவர், "2026 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மகத்தான வெற்றி பெறும்" என்றார். மேலும், "வரும் 13 ஆம் தேதி எங்களது இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான 'படைத்தலைவன்' திரைப்படம் உலகமெங்கும் வெளியாக உள்ளது. அதில் முதல் முறையாக AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் நடித்துள்ளார்.

அனைவரும் தவறாமல் திரையரங்கத்திற்கு சென்று திரைப்படத்தை பார்க்க வேண்டும். உங்கள் ஆசிர்வாதத்தை விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியனுக்கு தர வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

படைத்தலைவன் திரைப்படம்..

இயக்குநர் அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான திரைப்படம் 'படைத்தலைவன்'. இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம்.எஸ். பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் கடந்த 23 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல் காரணமா ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.