அரசியல்

திமுக வெளிநடப்பு: பர்னிச்சர் பிசினஸ் எல்லாம் வேறு எங்காவது பண்ணுங்க..! முதல்வர் விஜய் ஆவேசம்!

By Christon
23 Jun 2026, 11:14 AM
சட்டப்பேரவையில் தவெக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் காரணமாக திமுக எம்.எல்.ஏ-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரையின் போது, த.வெ.க மற்றும் திமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் காரணமாக திமுக எம்.எல்.ஏ-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் - ஒழுங்கு நிலைமை, மின்வெட்டுப் பிரச்சினை, போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார். இந்த நிலைமைகளுக்குக் கடந்த கால திமுக அரசுதான் முழு காரணம் என்று முதலமைச்சர் விஜய் கடுமையாகக் குற்றம் சாட்டினார். மேலும், "கடந்த ஆட்சியில் 10 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபி (DGP) பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது, த.வெ.க. அரசு அமைந்த பிறகே புதிய டிஜிபி நியமிக்கப்பட்டார்" என்றும், டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் பணம் வசூலிக்கப்பட்டதாகவும் அவர் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.

திமுகவினர் அமளி - அமைச்சர் விளக்கம்

முதலமைச்சரின் இந்த அதிரடிக் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவையில் இருந்த திமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் எழுந்து நின்று பலத்த கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் (சபாநாயகர்), "முதலமைச்சர் தனது உரையை முழுமையாக முடித்த பிறகு, எதிர்க்கட்சித் தலைவருக்குப் பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்படும்" என்று அமைதிப்படுத்த முயன்றார்.

எனினும், திமுகவினர் தொடர்ந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்தத் தடையைக் குறிப்பிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "முதலமைச்சர் இதுவரை சட்டமன்றத்தில் பேசவில்லை என்று கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சியினர் கூறி வந்தனர்; ஆனால், இப்போது அவர் பேசத் தொடங்கியதும் அவையை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபடுகின்றனர்" என்று சாடினார்.

அவையிலிருந்து வெளிநடப்பு

சபையில் நிலவிய பரபரப்பான சூழலுக்கு மத்தியிலும் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து கடந்த திமுக அரசின் மீதான தனது விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார். இதனால் ஆவேசமடைந்த எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், முதலமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.

முதல்வர் விஜய் ஆவேச பேச்சு

தொடர் பேசிய முதல்வர் விஜய், "திமுக தயவால் தான் ஆட்சி கதறிக் கொண்டிருக்கிறார்கள்; இடதுசாரிகள்
தங்கள் சுய முடிவாகவே தவெக அரசுக்கு ஆதரவு என கூறியுள்ளனர். நாங்கள் தான் அனுப்பி வைத்தோம் என்று கதறுகிறார்கள்; நீங்கள் அனுப்பி வைத்தவர்களுக்கு நான் அமைச்சர் பதவி கொடுத்தால் ஏன் கதறுகிறீர்கள்...?

கட்சி நிதி என்ற பெயரில் அடித்த கொள்ளையை தற்போது கஜானாவிற்கு சென்று சேர்த்துக் கொண்டிருக்கிறோம்; மக்கள் பணத்தை ஒரு போதும் தொடமாட்டோம்; மக்கள் பணத்தை தொட்டவர்களையும் ஒரு போதும் விடமாட்டோம். கடந்த ஆட்சியில் எத்தனை பெண்களுக்கு அமைச்சர் பதவி?; தவெக ஆட்சியில் சகோதரிகள் 4 பேருக்கு அமைச்சர் பதவி; வெளியே எழுந்து சென்றவர்களுக்கு கேட்க வேண்டும் என்பதால் சத்தமாக பேசினேன்.

நம் மீது அவதூறு பரப்பியது மட்டும் அல்லாமல், மக்கள் மீதும் அவதூறு பரப்புகிறார்கள். மக்கள் நமக்கு ஓட்டுபோட்டது தவறாம். 50 வருடமாக ஒரே டெனிக்கா? டெக்னிக்கை மாற்றுங்கள். பிறகு அது என்ன சொன்னீங்க... சோஃபா மாடல் ஆட்சியா? அது புரியவே எனக்கு லேட் ஆகிவிட்டது. பர்னிச்சர் பிசினஸ் எல்லாம் வேறு எங்காவது பண்ண சொல்லுங்கள். சட்டசபைக்குள் வேண்டாம். ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் இருந்தால் சொல்ல சொல்லுங்கள் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.