அரசியல்

DMK Files விவகாரம்: அண்ணாமலை மீதான வழக்கை வாபஸ் பெற்றார் டி.ஆர்.பாலு!

By Christon
30 Jun 2026, 12:34 PM
அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை டி.ஆர்.பாலு வாபஸ் பெற்றார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்கை, திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு வாபஸ் பெற்றுள்ளார். இரு தரப்பும் சமாதானமாகச் செல்ல முடிவெடுத்ததைத் தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, 'டி.எம்.கே ஃபைல்ஸ்' (DMK Files) என்ற பெயரில் திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில், திமுகவின் மூத்த தலைவரான டி.ஆர்.பாலு சுமார் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாகச் சொத்து சேர்த்திருப்பதாக அண்ணாமலை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். இக்குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்று கூறி, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராகத் தனது சாட்சியத்தைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து, அண்ணாமலை தரப்பில் டி.ஆர்.பாலுவிடம் நீதிமன்றத்தில் காரசாரமான குறுக்கு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இருதரப்பினரும் இந்த விவகாரத்தில் சமாதானமாகச் செல்ல சுமுக முடிவு எடுத்துள்ளனர். இதன் அடிப்படையில், அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கை டி.ஆர்.பாலு முறைப்படி வாபஸ் பெற்றதை அடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.