அரசியல்

பா.ஜ.க.வுடன் கூட்டணியா? தி.மு.க.வுக்கு டெல்லி தரும் ‘மெகா ஆஃபர்’!

By Sumalekha
26 Jul 2026, 09:00 AM
தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் தி.மு.க. தனது முந்தைய கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டை மாற்றி, வரைவு மசோதாவை பார்த்த பிறகே முடிவு எடுப்போம் என கூறியுள்ளது.
அடித்து அடித்து சத்தியம் செய்தாலும், அரசியலில் எதுவும் நடக்கலாம். அப்படித்தான், கடந்த ஆட்சியின்போது பா.ஜ.க.வை முழுமூச்சாக எதிர்த்த தி.மு.க., இப்போது மெல்ல மெல்ல அக்கட்சியை நெருங்கிவருகிறது. அந்தவகையில், கடந்த ஆட்சியில் தொகுதி மறுவரையறை மசோதாவை கடுமையாக எதிர்த்த தி.மு.க. இப்போது, 'வரைவு மசோதாவை பார்த்த பிறகே இறுதி நிலைப்பாடு எடுப்போம்' என்று குரலை தாழ்த்துகிறது. இதையொட்டி, மத்திய அமைச்சரவையில் இடம், வழக்குகளிலிருந்து பாதுகாப்பு மற்றும் தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கு கூடுதல் தொகுதிகள் என தி.மு.க. தரப்புக்கு டெல்லி ஆஃபர் வழங்கியிருப்பதுதான் தேசியளவில் பரபர ஹாட் நியூஸ்!

இதுகுறித்து, தி.மு.க.வின் அரசியல் நகர்வுகளை அறிந்த மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். 'த.வெ.க. அரசு அமைந்ததும். கூட்டணிக் கட்சிகளை இழந்து தனிமரமாக நிற்கிறது தி.மு.க. இந்த நேரத்தில், துவண்டுபோயிருக்கும் கட்சியினரை தெம்பூட்டவும், தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவரும் தவெகவுக்கு செக் 1 வைக்கவும் ஒரே வழி பாஜகவுடன் கூட்டணி சேர்வது மட்டும்தான் என்று நினைக்கிறது திமுக அதேபோல், பா.ஜ.கவுக்கும் இப்போது திமுகவின் உதவி தேவையாக இருக்கிறது.

என்னதான், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க. இருந்தாலும், எடப்பாடியுடன் அக்கட்சி சரியான புரிதலில் இல்லை. மேலும், மக்களவையில் பூஜ்ஜியமாகவும், மாநிலங்களவையில் போதிய வலிமை இல்லாமலும் தள்ளாடிக்கொண்டிருக்கும் அதிமுகவால் இனி பலன் இல்லை என்று நினைக்கிறது பாஜக. அதற்கேற்ப மக்களவை தொகுதி மறுவரையறை மசோதாவை, ஆட்சி மாற்றத்திற்கு முன்பு கடுமையாக எதிர்த்த திமுக தற்போது, சில கோரிக்கைகளுடன் அம்மசோதாவை ஆதரிக்க முன்வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தேவை 67 தொகுதிகள்... இறங்கிவந்த தி.மு.க!

அதனால்தான் சில நாட்களுக்கு முன்பு பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, தொகுதி மறுவரையறை குறித்து அரசு தெளிவான வழிமுறையை வெளியிட வேண்டும். தென் மாநிலங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். வரைவு மசோதாவை பார்த்த பின்னரே இறுதி நிலைப்பாடு எடுக்கப்படும் என்று பேசியிருக்கிறார்.

தற்போது மொத்தமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் தமிழகத்தின் எண்ணிக்கை 39 தொகுதிகள். அதன்படி தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18 சதவிகிதமாகும் இந்த சதவிகித அடிப்படையில் தொகுதி மறுவரையறையின்படி தமிழகத்தின் தொகுதிகள் எண்ணிக்கை 61 ஆக அதிகரிக்க வேண்டும் ஆனால், மத்திய அரசோ, 'மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்துக்கு 59 தொகுதிகள் தான் கிடைக்கும்' என்கிறது.

இந்த இரண்டையுமே. சொல்லப்போனால், தொகுகி மறுவரையறையே மொத்தமாக எதிர்த்தது திமுக. ஆனால், இப்போதோ 7:18 சதவிகித விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின்படி 61 தொகுதிகள் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்தால், இம்மசோதாவுக்கு ஆகரவு அளிப்போம் என்று சொல்வதாக தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையில் தமிழகத்துக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், திமுக இம்மசோதாவை ஆதரிக்கக் கூடும்.

அதேசமயம் இதற்கு, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் என்பதையும் தி.மு.க. உணராமல் இல்லை. எனவே இதை நியாயப்படுத்த உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு 2019ல் கொண்டுவந்தபோது, திமுக.கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் அதை ஆதரித்தன. அப்போது நாடாளுமன்றத்தில் 'என்ன அநியாயம் இது? என்று கனிமொழி கொந்தளித்திருப்பார்.

இந்த வீடியோவை இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாக்கிவருகிறது தி.மு.க. 'அன்று பாஜகவை ஆதரித்த இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ். இப்போது எங்களைப் பற்றி பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது" என்பதுதான் இதன் சாராம்சம்.

தி.மு.க.வுக்கு என்ன லாபம்?

இது நடந்தால், முதலில் திமுக எம்.பிக்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெறக் கூடும். அதனால்தானோ என்னவோ இப்போதே தி.மு.க. பொதுக்கூட்ட மேடைகளில் ‘மத்திய அமைச்சர் திருச்சி சிவா' என்று தொண்டர்கள் முழங்குகிறார்கள். அதற்கேற்ப கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறியதும், மாநிலங்களவையில் தனது இருக்கையை மாற்றிய திருச்சி சிவா இப்போது பா.ஜ.க. எம்.பிக்கள் அருகில் உட்கார்ந்திருக்கிறார்.

சரி! இந்தனவுக்கு தி.மு.க இறங்கிப்போய் பா.ஜ.க. கூட்டணியில் ஐக்கியமாகுமா எனும் கேள்வியும் எழாமல் இல்லை. தமிழக அரசியலில் த.வெ.க.வால் அக்கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்துதான் இதற்கான பதில். மத்தியில் அல்லது மாநிலத்தில் என இரண்டில் ஏதாவது ஒன்றில் அதிகாரத்தில் இருக்க வேண்டும். இல்லையென்றால் இரு தரப்பிலிருந்தும் கடும் நெருக்கடிகளை சந்திக்கவேண்டும்.

இதனால், கட்சியை நடத்துவதில் உள்ள சிரமங்களை உணர்ந்துள்ளது திமுக மேலும், மதச்சார்பின்மையை தீவிரமாக கடைபிடித்தும் கடந்த சட்டசபைத் தேர்தலில் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின வாக்குகள் எதிர்பார்த்தபடி வந்து சேரவில்லை. அத்தனையையும் வாரிச்சுருட்டிக்கொண்டது த.வெ.க போதாக்குறைக்கு இந்துக்கள் ஒருபகுதியினரின் ஓட்டுகளையும் இழந்ததுதான் மிச்சம் அதேபோல் மாஜி அமைச்சர்கள் நேரு செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் த.வெ.க.வின் சட்டரீதியான தாக்குதல்களும் தி.மு.க. புள்ளிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. எனவே. இந்த நிலைமையை சமாளிக்க பா.ஜ.க.வுடன் பயணிப்பது மட்டுமே பாதுகாப்பு என்று நினைக்கிறது தி.மு.க. தலைமை' என்றார் விரிவாக இதுகுறித்து மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாசேந்திரனிடம் கேட்டதற்கு 'கூட்டணியில் யார் இடம்பெற வேண்டும் என்பதையெல்லாம் டெல்லி தலைமைதான் முடிவு செய்யும். அதைப்பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது' என்றார் சுருக்கமாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியோ, கூட்டணிக்கான அவசியம் இப்போது எதுவுமில்லை தேர்தல் வரும்போது கூட்டணிக்கான முடிவுகளை தலைவர் எடுப்பார்" என்றார்.
பார்க்கத்தானே போகிறோம்!