கோவை ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் தமிழ்நாட்டின் அரசு நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் போலி ஆசிரியர்களின் பெயர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், அரசு ஆவணங்களைச் சுட்டிக்காட்டி விளக்கம் அளித்தார். "கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதி புத்தகங்கள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு, 7 நாட்களுக்குள் விநியோகிக்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து மார்ச் 14-ஆம் தேதியன்று இதற்கான பணப் பரிவர்த்தனைகளும் நடந்து முடிந்துள்ளன. இதன் மூலம் நூல் கொள்முதல் ஊழல் திமுக ஆட்சிக் காலத்தில்தான் நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவிலேயே முதல்முறையாக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி மிகப்பெரிய ஊழலை திமுக செய்துள்ளது. ஒரே நபர் இரண்டு மற்றும் மூன்று பதிப்பகங்களை நடத்தி இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். போலி நூல்களில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்களின் பெயர்களைக் கண்டறிந்து கூறுபவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும். திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களை 'டிஜிட்டல் கரையான்' அரித்துள்ளது," எனக் கடுமையாக விமர்சித்தார்.
கோவை, சென்னை கன்னிமாரா, திருச்சி, கடலூர், சேலம் ஆகிய மாவட்ட நூலகங்களுக்கும் இந்தச் சர்ச்சைக்குரிய நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. உயர்மட்டக் குழுவின் ஒப்புதலோடு பெறப்பட்ட இந்த நூல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளது. மேலும், அனைத்து நூலகங்களிலும் 'வாத்தி ரெய்டு' எனப்படும் கள ஆய்வுகளை மேற்கொள்ளச் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும், நூலகக் கட்டடக் கட்டுமானப் பணிகளிலும் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அவர், "எங்களது ஆட்சிக் காலத்தில் ஒரு புத்தகம் கூட வாங்கப்படவில்லை; ஒரு ரூபாய் கூட கணக்கில் இருந்து செல்லவில்லை. அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துக் குப்பைகளை விட மோசமான புத்தகங்களைக் கொள்முதல் செய்ய வைத்த திமுகவின் அரசியல் தலைமைதான் இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். இந்த முறைகேட்டிற்காகத் தமிழ்நாட்டு மாணவர்களிடம் திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்," என்றும் அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தினார்.