2026 சட்டமன்ற தேர்தலின் தோல்வியில் இருந்து மீளும் நோக்கில் இன்று திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்று 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களின் அடுத்த தேர்தலில் பிரதிபலிக்குமா...
தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளின் மூலம் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் 59 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 2021 தேர்தலில் 133 தொகுதிகளில் வென்றிருந்த நிலையில், இந்த முறை 74 தொகுதிகளை இழந்துள்ளது.
இந்த தேர்தல் முடிவுக்குப் பிறகு, தி.மு.க. தனது கட்சி அமைப்பையே அடிமட்டத்தில் இருந்து மாற்றும் வகையில் 9 முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது. தோல்விக்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுவது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்காதது, வாக்காளர் அடிப்படையிலான அமைப்பை விரிவுபடுத்தாதது, அடிமட்டத் தொடர்பை வலுப்படுத்தாமல் அலட்சியப்போக்குடன் இருந்தது என குழு அமைக்கப்பெற்று தலைமை கண்டறிந்துள்ளது.
இந்த நிலையில் தேர்தல் தோல்வியின் காரணிகளை கண்டறிந்ததில் இருந்து, கட்சியை மறுசீரமைத்து மீண்டும் ஆட்சியை பிடிக்கும் உத்வேகத்தில் தலைமை உள்ளது.
9 தீர்மானங்கள்... சிம்பிளாக இதுதான்!
1)45 வயதுக்குள் இளம் கிளைச் செயலாளர்கள்:
அடிமட்டத்தில் இளம் நிர்வாகிகளை உருவாக்கும் முயற்சி. ஒருவருக்கு இரண்டு முறை மட்டுமே வாய்ப்பு.
2)மாநகரங்களிலும் புதிய கிளைகள்:
சென்னை உள்ளிட்ட முக்கிய மாநகரங்களில் புதிய கிளை அமைப்புகள் உருவாக்கப்படும். இதன் மூலம் நகர்ப்புறத்தில் கட்சியின் அடித்தளத்தை விரிவுபடுத்த திட்டம்.
3)வட்டங்கள் வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமனம்:
சென்னையில் சுமார் 10 ஆயிரம் வாக்காளர்களுக்கும், பிற மாநகரங்களில் சுமார் 5 ஆயிரம் வாக்காளர்களுக்கும் ஒரு வட்ட அமைப்பு என்ற முறை கொண்டு வரப்படுகிறது.
4)பேரூர் நிர்வாகத்தில் மாற்றம்:
பேரூர்ச் செயலாளர்களுக்கு 60 வயது வரம்பு மற்றும் இரண்டு முறை பதவி என்ற நடைமுறை.
5)பகுதிக் கழகங்கள் சிறிய அளவில் நிர்வகிப்பு:
சென்னையில் 40 ஆயிரம், பிற மாநகரங்களில் 30 ஆயிரம் வாக்காளர்கள் என்ற அடிப்படையில் பகுதிகள் அமைக்கப்படும்.
6)நகரக் கழகங்களும் மறுசீரமைப்பு:
சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட நகரக் கழகங்கள் உருவாக்கப்பட்டு, 60 வயது வரம்பும் இரண்டு முறை பதவி என்ற விதியும் அமல்படுத்தப்படும்.
7)ஒன்றியங்கள் தொகுதி அடிப்படையில்:
சுமார் 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம். ஒரு ஊராட்சி இரண்டாகப் பிரிக்கப்படாது. ஒரு ஒன்றியமும் ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் இருக்க வேண்டும்.
8)மாவட்டங்கள் 77-ல் இருந்து 110:
இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் மாவட்டங்கள் அதிகரிக்கப்படும். மாவட்டச் செயலாளருக்கு 70 வயது வரம்பு; அதிகபட்சம் மூன்று முறை பதவி.
9)15 நாட்களில் அமைப்பு தயார்:
110 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டதும், கீழ்மட்ட நிர்வாக அமைப்புகள் 15 நாட்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும்.
நிறைவேற்றப்பட்ட இந்த முக்கிய தீர்மானங்கள் வரும் காலத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருந்தாலும், தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்று மிகுந்த நம்பிக்கையில் இருந்தவர்கள் அனைவர்க்கும் இந்த தீர்மானங்கள் மூலம் தெளிவும், புத்துணர்வும் பெற்றிருப்பார்கள் கழக தோழர்கள் என திமுக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.