அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிளவை சரி செய்ய, சமாதான தூதுவராக ரஜினிகாந்த் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் ரஜினி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்திக்கும் 11வது தோல்வியாகும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல பிரிவுகளாக அதிமுக சிதறியது. தற்போது இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி என இரு அணி உருவாகி உள்ளது.
தவெகவை ஆதரவு நிலைப்பாடுடன் வேலுமணி தரப்பு செயல்பட தொடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி பொதுக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்ற குரல் அதிமுக ஒலிக்க தொடங்கி உள்ளது.
பொதுக்குழுவை கூட்ட வேலுமணி தரப்பு கையெழுத்து கேட்டால் யாரும் போட வேண்டாம் என எடப்பாடி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதலை சரி செய்ய நடிகர் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது. சமீபத்தில் ரஜினி தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னரே, திமுக - அதிமுக கூட்டணி அமைத்து, ஆட்சி அமைப்பதற்கான பணிகள் நடந்தன. அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. அதேநேரத்தில், பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டது. இந்த பிளவுக்கு காரணம் தான் என ரஜினி நினைப்பதாக அவரது நிருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்கும் முயற்சியை ரஜினி கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது.
அதுமட்டுமின்றி, அதிமுக இருதரப்பு மூத்த தலைவர்களிடமும் ரஜினிகாந்த் போனில் பேசி சமாதானப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார். "தமிழகத்துக்கு அதிமுக அவசியம் தேவை, உங்களுக்குள் சண்டை போடாமல், இணைந்து பணியாற்றுங்கள்" என அதிமுக மூத்த தலைவர்களிடம் வலியுறுத்தி வருகிறாராம். தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி தரப்பை சந்தித்து பேசவும் ரஜினி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.