Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

Mohan G Arrest : இயக்குநர் மோகன் ஜி கைது: சாதாரண மக்கள் மீது வீரத்தைக் காட்டக்கூடாது.. அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

By nishika
24 Sep 2024, 09:38 PM
Anbumani Ramadoss Condemns Mohan G Arrest : திரைப்பட இயக்குனர் மோகனை செய்யாத குற்றத்திற்காக கைது செய்வதா? உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Anbumani Ramadoss Condemns Mohan G Arrest : பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் உள்ளிட்டத் திரைப்படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “எனக்கு தெரிந்த கோயில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதாகத் தான் செவி வழியாக வந்த செய்தியாக கேள்விப்பட்டேன்” எனப் பேசி இருந்தார். இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜி, சென்னை காசிமேடு இல்லத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக மோகன் ஜி பேட்டியளித்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஜி.மோகன்  எந்த வித  குற்றமும்  செய்யாத  நிலையில் சென்னை காசிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில்  இன்று காலை கைது  செய்யப்பட்டிருக்கிறார்.   அவர் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதை காவல்துறை இதுவரை தெரிவிக்கவில்லை. எந்த ஒரு வழக்கிலும் ஒருவரை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் பல்வேறு வழிமுறைகளை வகுத்திருக்கும் நிலையில், அவை எதையும் கடைபிடிக்காமல், ஒரு தீவிரவாதியை பிடிப்பது போல மோகனை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

பழனி தண்டாயுதபாணி  திருக்கோயில் பஞ்சாமிர்தம் சில வாரங்களுக்கு முன்  பெருமளவில் அழிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி,  அது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்ட ஐயங்களைத் தான் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் இது தொடர்பான செய்திகள் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தான் அவர் கூறியிருந்தார். இதில் எந்தத் தவறும் இல்லை. பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் அழிக்கப்பட்டதன் பின்னணி குறித்த முழு விவரங்களை அரசு வெளியிட்டிருந்தால் இந்த சிக்கலே எழுந்திருக்காது.

மேலும் படிக்க: திருப்பதி லட்டு பிரசாதத்தில் புகையிலையா? வதந்தி பரப்பாதீர்கள்.. திருமலை தேவஸ்தானம் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயில் சிக்கல் தொடர்பாக சமயபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அங்கிருந்து தனிப்படை காவலர்கள் விரைந்து வந்து மோகனை கைது செய்திருப்பதன் பின்னணியில் திட்டமிட்டு பின்னப்பட்ட சதிவலை இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பவர்களை கைது செய்யாத தமிழக அரசு, கிளி ஜோசியர்களையும்,  சமூக ஊடகங்களில் பேசுபவர்களையும் கைது செய்து வீரத்தைக் காட்டக் கூடாது. இயக்குனர் மோகனை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.