அரசியல்

விஜய் பாணியில் தனுஷ்.. உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க திட்டம்?

By Christon
29 Jul 2026, 05:12 PM
அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நடிகர் தனுஷின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் தனுஷ். சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர் விஜய், தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அவரைப் போன்றே தனுஷும் தனது அரசியல் பயணத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளாரோ என்ற விவாதம் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளது.

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டுத் திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அவருடைய நற்பணி மன்றங்கள் சார்பில் பிரம்மாண்ட இரத்த தான முகாம்களும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. தமிழகத்தில் விரைவில் வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலைத் தனது அரசியல் பலத்தை அறியும் முதற்கட்டச் சோதனைக் களமாகப் பயன்படுத்தத் தனுஷ் திட்டமிட்டுள்ளதாகப் பேசப்படுகிறது.

அரசியல் விமர்சகர்களின் கணிப்புப்படி, தனுஷ் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகவோ அல்லது மக்கள் இயக்க பாணியிலோ போட்டியிட மறைமுகமாக அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சில முக்கிய மாவட்டங்களில் தனுஷே நேரடியாக வேட்பாளர்களை நிறுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் தனுஷின் இந்த அரசியல் நகர்வுகளுக்கு அண்மையில் திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சு முக்கியக் காரணமாக அமைந்தது. அந்நிகழ்வில் பேசிய அவர், "நமது ஒற்றுமைக்கு மிகப்பெரிய சக்தி உள்ளது. அதனை வெறும் ஆடியோ லான்ச் மற்றும் புகைப்படங்களுடன் நிறுத்திக் கொள்ளாமல், உங்கள் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களின் தேவைகளை அறிந்து நற்பணிகளில் தீவிரமாக ஈடுபடுங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

திரைப்பட நட்சத்திரங்களின் அரசியல் வருகை தமிழகத்திற்குப் புதிதல்ல என்றாலும், தனுஷின் தற்போதைய செயல்பாடுகள் அவரது எதிர்கால அரசியல் விருப்பத்தைச் சூசகமாக உணர்த்துவதாகவே பார்க்கப்படுகிறது. எனினும், உள்ளாட்சித் தேர்தல் போட்டி மற்றும் முழு நேர அரசியல் வருகை குறித்த தகவல்கள் உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பது விரைவில் தெரியவரும்.

விஜய் பாணியில் தனுஷ்

தற்போது, விஜய் பாணியை தனுஷ் கையில் எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசியல் வருகைக்கு அடித்தளமாக இருந்தது அவரது மக்கள் இயக்கம் தான். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முதலாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றிந்தனர்.

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட்டது போல, தற்போது நடிகர் தனுஷின் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தல்களில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது Talk Of The Town ஆக உள்ளது.