Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு? ஆதவ் அர்ஜுனா மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

By Christon
16 Apr 2026, 11:48 AM
வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவிக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகச் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவிக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஜி. தேவராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில், தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வேட்பாளர்கள் தங்களது மற்றும் குடும்பத்தினரின் சொத்து விவரங்களைப் படிவம் 26-இல் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். ஆனால், ஆதவ் அர்ஜுனா தனது மனைவியின் பெயரில் உள்ள பெரும் முதலீடுகளை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

ரூ. 240 கோடி மதிப்பிலான சொத்துக்கள்?

மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ள புகாரின்படி, ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி, 'மார்ட்டின் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ்' (ரூ.117 கோடி சொத்து) மற்றும் 'டாமினன்ட் டவர்ஸ் அண்ட் டிரேடர்ஸ்' (ரூ.123 கோடி சொத்து) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார். இந்த நிறுவனங்களின் சொத்து விவரங்களையும், அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட சில சொத்து விவரங்களையும் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடக் கோரிக்கை

இது தொடர்பாகத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும், அவர் அதை முறையாகப் பரிசீலிக்காமல் நிராகரித்துவிட்டதாகத் தேவராஜன் தனது மனுவில் வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே, தேர்தல் அதிகாரியின் அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், சொத்து விவரங்களை மறைத்தது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதால் வில்லிவாக்கம் தேர்தல் களத்தில் பரபரப்பு தொற்றியுள்ளது.