அரசியல்

“கரூர் கம்பெனியின் அடிமையாக தி.மு.க.!” ஸ்டாலினை நோக்கி வெடித்த ‘பார்ட்டி ஃபண்ட்’ பூகம்பம்

By Sumalekha
26 Jul 2026, 02:00 PM
கோவை மாநகராட்சி தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் பாபு செல்வக்குமார், கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்றும், ‘பார்ட்டி ஃபண்ட்’ இல்லாமல் எந்தப் பணியும் நடக்காது என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
'கரூர் கம்பெனியின் அடிமையாக கோவை தி.மு.க. தொடர்வது மிகப்பெரிய அவலம். ஆனால், கட்சிக்காரனின் மனநிலையை அறியாமல் இன்னமும் சர்வாதிகார நிலையில் தலைமை இருப்பதுதான் வேதனை' லண்டன் ரிட்டர்ன் ஸ்டாலினை நோக்கி கோவையிலிருந்து வெடித்திருக்கிறது புதிய பூகம்பம்!

'கடந்த திமுக ஆட்சியின்போது அத்தனை அரசு துறைகளிலும் 'பார்ட்டி ஃபண்ட் கலாசாரம் அட்ராசிட்டி செய்தது. டாஸ்மாக்கில் கோடி கோடியாக குவித்தார்கள்" என்று முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் விளாசித் தள்ளினார்.

அதையே தவெ.க.வினரும் மேடைக்கு மேடை பேசிவருகின்றனர். இந்த நிலையில், கோவை மாநகராட்சியில் திமுகவின் அங்கமாக இருந்தவரே பாலாஜியின் நிர்வாகத்தில் பார்ட்டி ஃபண்ட் இல்லாமல் ஒரு துரும்பும் நகர்த்த முடியாது என்று போட்டுப் பொளந்திருப்பதுதான் உச்சபட்ச ஷாக் கோவை மாநகராட்சி 22வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பாபு செல்வக்குமார். இவர் அக்கட்சியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

மேலும், திமுகவின் ஆட்சி மற்றும் ஊழல்களையும் போட்டு உரித்தார். இதுகுறித்து அவரிடம் பேசினோம். 'திமு.க. தலைமையைப் பொறுத்தவரை நான் சாதாரண கவுன்சிலராக இருக்கலாம். ஆனால் நான் சொல்கிற உண்மை சாதாரணமானது இல்லை. திமுகவின் மாஜி அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும், மாவட்டச் செயலாளர்களும் இந்த உண்மையை சொல்லவே மாட்டார்கள் காரணம், பணத்தை அள்ளிக் குளிக்க அவர்களுக்கு அந்த கட்சியும் பதவியும் தேவை. என்னை மாதிரி ஆட்களுக்கு அப்படி எந்த தேவையும் இல்லை

திமுக இன்றைக்கு கார்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது. இங்கே சாமானியன் எந்தக் காலத்திலும் உயர் பொறுப்புக்கோ, பதவிக்கோ வரவே முடியாத நிலை உருவாகியிருக்கிறது. தி.மு.க.வில் உட்கட்சி ஜனநாயகம் என்பதே கிடையாது. ஸ்டாலின் காலத்தில் அது தூக்கி எறியப்பட்டிருக்கிறது. கட்சித் தேர்தலே நடத்தாமல் நியமன பதவிகள் மட்டுமே போட்டுக்கொள்ளும் சர்வாதிகார நிலையிலேயே கட்சி வழிநடத்தப்படுகிறது.

ஸ்டாலின் கட்சித் தலைவர் என்கிற அடையாளத்தோடு மட்டும்தான் இருக்கிறார். தி.மு.க.வின் சி.இ.ஓவாக இருப்பது அவரின் மாப்பிள்ளை சபரீசன்தான் கட்சியின் தலைமைக்கு நிர்வாகிகள் அனைவரும் வேலைக்காரர்களாகவே இருக்கிறார்கள். மேல்மட்டத்திற்கு கப்பம் கட்ட தெரிந்தவர்களே, கட்சியில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். ஒரு கோடித் தொண்டர்களின் உழைப்பை திமு.க. தலைவர் குடும்பமும், சில மாஜி அமைச்சர்களின் குடும்பங்களும் அனுபவிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜியை நியமித்ததும், கோவை மாவட்ட திமுக. கரூர் கம்பெனியாகவே மாறிப்போனது. கட்சி நிர்வாகிகள் அனைவரும் செந்தில்பாலாஜி கம்பெனியின் வேவைக்காரர்களைப் போலவே நடத்தப்பட்டோம். அனைத்து பணிகளையும் மானிட்டர் பண்ணுவதற்கு கரூரில் இருந்து ஒரு சூப்பர்வைசர் வருவார் என்றால், இந்த ஊரில் இருக்கும் நிர்வாகிகளை மக்கள் எப்படி மதிப்பார்கள்?

பார்ட்டி ஃபண்ட் ஆட்டம். சொந்தக் கட்சிக்காரனையும் விட்டு வைக்கவில்லை. பாலாஜி நிர்வாகத்தின் கீழ். கட்சி நிதி தராமல் ஒரு துரும்பைக்கூட நகர்த்த முடியவில்லை. எனது கவுன்சிலர் பதவியை வைத்து ஒரு வீட்டு வரி ரசீதைக்கூட பார்ட்டி ஃபண்ட் இல்லாமல் செய்துகொடுக்க முடியாது என்றால் இந்த கட்சியில் நான் ஏன் இருக்க வேண்டும்? எனது வேலைக்கே பார்ட்டி ஃப்ண்ட் கேட்டார்கள்

கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்தவர்களை சுயலாபத்துக்காக செந்தில்பாலாஜி நீக்கியபோது தலைமை வேடிக்கை பார்த்தது. இதனால் உண்மையான விசுவாசிகள் அதிருப்திக்கும் அவமானத்திற்கும் ஆளானார்கள். என்னைப் போன்றவர்களின் கருத்தைக் கேட்கிற மனநிலையில் தலைமை இல்லை. இனியும் மக்களுக்கு நல்லது செய்யலாம் என நினைப்பது முட்டாள்தனம் எனவே திமுகவிலிருந்து விலகுகிறேன்.

என்னைப்போலவே இன்னும் பல திமுக கவுன்சிலர்கள் விரைவில் கட்சியைவிட்டு வெளியேறுவார்கள். அந்தளவுக்கு செந்தில்பாலாஜி கோவை மாவட்டத்தில் கட்சியை முடித்துக் கட்டிவிட்டார். மதிப்பும், மானமும் மிக்க மக்களைக்கொண்டது கோவை. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்களை அவரிடம் பிச்சையெடுக்கவும், அவர் பங்களா வாசவில் காத்திருக்கவும் வைத்துவிட்டார். அதன் விளைவுதான் திமுகவிலிருந்து பலர் வெளியேறும் முடிவை எடுக்கும் நிலை" என்று சொல்லி முடித்தார்.

கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் சிவரோ, "எந்தக் கட்சி ஆளுங்கட்சியோ அதை குளிர்வித்து பிழைப்பது சிலருக்கு வழக்கம். இந்த பாபு கோவை மாவட்ட திமுகவில் என்ன சாதித்தார்? ஒரு கவுன்சிலராக தன் வார்டு மக்களுக்கு என்ன செய்துவிட்டார்? பாபு கதையை எடுத்துவிட்டால் கோவைக்கே குமட்டல் வந்துவிடும். எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் குறுக்கு வழியில் வெல்ல நினைக்கும் கோவை த.வெ.க.வினர் இப்படி சில புல்லுருவிகளை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு தி.மு.கவை கில்பாலாஜி அசிங்கப்படுத்த முயல்கிறார்கள்" என்றனர்.

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரான துரை செந்தமிழ்ச்செல்வன் இதுகுறித்து, "வாழ்க்கை கொடுத்த கழகத்தை பழிப்பது பாவம் சிலர் ஏதோ ஒரு ஆதாய நோக்கில் திமுகவை திட்டுகிறார்கள். நாளை மீண்டும் எங்கள் கட்சி ஆட்சியில் அமரும் அப்போது மீண்டும் இங்கே வருவார்கள். தவெக நிர்வாகிகள் இப்படி திமுகவில் ஆள் பிடித்து பேச வைப்பதைவிட எங்களோடு நேர்மையாக களத்தில் மோத வேண்டும்" என்றார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பக்குமாரிடம் கேட்டபோது 'பணம், அண்டா குண்டா கொடுத்து குறுக்கு வழியில் ஓட்டு கேட்டது யார் என்று மக்களுக்கு தெரியும். முதல்வர் தளபதிக்கு ைஎன்றும் நேர்வழி மட்டுமே சொந்தக் கட்சிக்காரரே திட்டுமளவுக்கு திமுக நிலை இருப்பது அவலம் என்றார்.

மாத்தி மாத்தி திட்டிக்கிறாங்களே!