அரசியல்

அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு: தவெகவில் இருந்து பெண் வழக்கறிஞர் அதிரடி நீக்கம்!

By Christon
18 Jul 2026, 11:36 AM
அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக வழக்கு தொடர்ந்த வழக்குரைஞர் ஞானசௌந்தரி தவெகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்கப்படுவதாகக் கூறி, தவெக அமைச்சர் ஆனந்த் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ஞானசௌந்தரி, தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு மற்றும் லஞ்சம் கேட்பதாகக் கூறி, தவெக அமைச்சர் ஆனந்த் உள்ளிட்ட சிலருக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஞானசௌந்தரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை, நேற்று உயர்நீதிமன்றம் முழுமையாக முடித்து வைத்தது. இந்த நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஞானசௌந்தரி மீது தவெக தலைமை தற்போது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இணையவழி (Online) மூலமாகத் தவெகவில் உறுப்பினராக இணைந்த சந்திரமோகன் என்பவரின் மனைவி ஞானசௌந்தரி, கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முற்றிலும் முரணாகச் செயல்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு போலி மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் உடனடியாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் யாரும் அவரோடு எந்தவிதமான கட்சித் தொடர்போ அல்லது ஒத்துழைப்போ வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் தவெக தலைமை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.