அரசியல்

குப்பை மேடாக மாறிவரும் தமிழக மாநகரங்கள்- நயினார் நாகேந்திரன்

By Christon
20 Jul 2025, 12:29 PM
குற்றங்களைத் தான் திமுக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகிவரும் குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
குப்பைகளைப் பெருகவிட்டு, நோய்களின் கூடாரமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்டு மேடைதோறும் பொற்கால ஆட்சி என வெற்றுப் பெருமை பேச திமுக அரசு வெட்கப்பட வேண்டும்” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

கடைசி இடத்தில் தமிழ்நாடு

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிகையில், “மத்திய அரசால் வெளியிடப்பட்ட தூய்மை நகரங்கள் பட்டியலில் தேசிய அளவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 40 நகரங்களின் தரவரிசையில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை 38-வது இடத்தையும், மதுரை 40-வது இடத்தையும் பெற்றிருப்பது மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா?

தமிழ்நாட்டின் ஒரு நகரம் கூட தூய்மை நகரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் தூய்மைப்பணிகளுக்காக வராத நிலையில், வருடாவருடம் பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவிடுவதாக திராவிட மாடல் அரசு காட்டிய கணக்குகள் எல்லாம் என்ன ஆனது? தமிழ்நாட்டில் பெருகி வரும் குற்றங்களைத் தான் திமுக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகிவரும் குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா?

நோய்களின் தொட்டிலாக மாறும் தமிழ்நாடு

தரம் குன்றி வரும் அரசு மருத்துவமனைகள், குப்பைகளின் கூடாரமாகி வரும் மாநகரங்கள், பராமரிப்பு என்ற பெயரில் நடக்கும் ஊழல் முறைகேடுகள், அவற்றைக் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள் என திராவிட மாடல் அரசின் திறனற்ற நிர்வாகத்தால் நோய்களின் தொட்டிலாக தமிழ்நாடு மாறிவருவது மிகக் கொடுமையானது.

குப்பைக்காடாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டு, நாடு போற்றும் நல்லாட்சி என்று இனியொரு முறை கூறுவதற்கு திமுகவின் தலைவர்கள் கூனிக்குறுக வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.