அரசியல்

இடைத்தேர்தல் முடிவுகள்: 4 மாத நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி- அமைச்சர் நிர்மல் குமார் பெருமிதம்!

By Christon
09 Oct 2026, 04:06 PM
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்றுள்ளது, தவெக அரசின் 4 மாத நல்லாட்சிக்குக் கிடைத்த சான்று என அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.

தமிழ்நாட்டில் காலியாக இருந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், இந்த இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் தனது வெற்றியை உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த வெற்றியைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இடைத்தேர்தல் வெற்றி குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், இந்த வெற்றி முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் நான்கு மாத கால சிறப்பான ஆட்சிக்கு மக்கள் அளித்த நற்சான்றிதழ் எனக் குறிப்பிட்டார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை விரும்பி வாக்களித்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே இந்த இடைத்தேர்தல் முடிவுகளும் அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க-வின் தற்போதைய நிலைமையை உணர்ந்து அக்கட்சியிலிருந்து பலர் விலகி வருவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அப்படி இணைந்து போட்டியிட்ட சட்டமன்ற உறுப்பினர்களே தற்போது மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே மாநில நலனுக்கு எதிராகச் செயல்படுவதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டுள்ளதாகவும், இதனால் இனிவரும் அனைத்துத் தேர்தல்களிலும் த.வெ.க மட்டுமே வெற்றி நடை போடும் என்றும் அவர் தெரிவித்தார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் த.வெ.க-விற்கு பெருவாரியான ஆதரவை வழங்கி வெற்றி பெறச் செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், மக்கள் விரும்பும் வகையிலான இந்த நல்லாட்சி வரும் காலங்களிலும் தொடர்ந்து செயல்படும் என உறுதியளித்தார்.