தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மேடையில் பேசிய அவர், தவெக வேட்பாளரை "பெட்டி பாமா, பல்டி பாமா" என்று மக்கள் அழைப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், தவெக வேட்பாளர் சத்யபாமாவின் உருவம் குறித்தும் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
"பெண்களை இழிவாகப் பேசுவதே திமுகவின் DNA"
அமைச்சர் செங்கோட்டையன் தனது எக்ஸ் பக்கத்தில், "தேர்தல் பிரச்சாரமா?பெண்களை கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா? பெண்களை கேலி பேசும் டிஎன்ஏ அது திமுகவின் கேடுகெட்ட டிஎன்ஏ!
நிலை மாறினால் குணம் மாறுவான் பொய் நீதியும் நேர்மையும் பேசுவான் தினம் ஜாதியும் பேதமும்கூறுவான்! பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட திமுக தலைவரே மன்னிப்பு கேள்! மன்னிப்பு கேள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"தந்தையின் சட்டத்தை மதிக்காமல் மீறுவது சரியா?"
அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில், "உருவக்கேலி கூடாது என்று வழிகாட்டக்கூடிய தலைவரான அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே இப்படி பேசி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆணாதிக்கம் மிகுந்த சமூக கட்டமைப்பில் பெண்கள் பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது. அதுவும் தலித் பெண்கள் வருவது அதனினும் அரிது. அதை முடக்கும் வகையில், ஆணாதிக்க சமூகம் தமது அதிகாரத்தை பயன்படுத்துவதை பார்க்கிறோம்.
அதனால் தான் பெண்களை பொது இடங்களில் கேலி செய்தால் ஓராண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என 1998 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு ‘தமிழ்நாடு பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்டம்’என பெயர் சூட்டப்பட்டது.
இச்சட்டத்தை இயற்றியவர் யார் தெரியுமா? திமுக தலைவரும் திராவிட இயக்கத்தின் ஆளுமையுமான கலைஞர் கருணாநிதி தான். தந்தையின் சட்டத்தை மதிக்காமல் மீறுவது சரியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதான் 70 வருட பிரசார முறையா?
பாஜக மூத்த நிர்வாகியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில், "தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பொதுக் கூட்ட மேடையில், தவெக வேட்பாளரை பற்றி உருவ கேலி செய்யும் விதமாக பேசியது கடும் கண்டனத்திற்குரியது.
பிரசார மேடைகளிலும் பொதுக்கூட்ட மேடைகளிலும் பெண்களை தரக்குறைவாகவும் இழிவாகவும் தொடர்ந்து பேசி வரும் தந்தையும் மகனும் தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து பெண்களை அநாகரீகமாக பேசி வருவது தொடர் கதையாகி வருகிறது. இது போன்ற பேச்சுக்களை திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மாற்றுக் கட்சி வேட்பாளர்களை எதிர்க்கத் திராணியின்றி அநாகரீக வார்த்தைகளை பேசி ஓட்டு கேட்பதுதான் திமுக-வின் 70 வருட பிரசார முறையா? தரம் தாழ்ந்து பேசிப் பேசியே அழிவை நோக்கிச் செல்லும் திமுக எத்தனை பட்டாலும் திருந்திய பாடில்லை" என்று விமர்சித்துள்ளார்.
மேலும், தவெகவின் மற்ற அமைச்சர்களும், நிர்வாகிகளும் மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சுக்குத் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.