Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

"விஜயைக் கையில் எடுக்க பாஜக முயற்சி"- விசிக தலைவர் திருமாவளவன்

By Christon
07 Oct 2025, 03:20 PM
"விஜய்யைக் கையில் எடுக்க பா.ஜ.க. முயற்சிகளை மேற்கொள்கிறது" என்று திருமாவளவன் தெரிவித்தார்.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் படங்களுக்குச் சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரூர் விவகாரத்தில் விஜய் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கரூர் விவகாரம் மற்றும் பாஜக மீது குற்றச்சாட்டு

விஜய் மீது தங்களுக்கு எந்த வன்மமும் இல்லை என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தவில்லை என்றும் திருமாவளவன் கூறினார். நடந்த துயரச் சம்பவத்திற்கு விஜய் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றுதான் தாங்கள் விமர்சனம் செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாகவும், ஆனால் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்தான் அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

"விஜய்யைக் கையில் எடுக்க பா.ஜ.க. முயற்சிகளை மேற்கொள்கிறது" என்று குறிப்பிட்ட திருமாவளவன், "சதிகார, சூழ்ச்சிகார அரசியல் சக்திகளிடம் சிக்கினால் அவர் இது போன்ற பல நெருக்கடிகளைச் சந்திக்க நேரும். விஜய் சுதந்திரமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்" என்றும் தெரிவித்தார்.

தலைமை நீதிபதி மீதான தாக்குதல் குறித்து

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீச முயன்ற சம்பவத்தை விசிக மிக வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் திருமாவளவன் கூறினார்.

"உச்ச நீதிமன்றத்திலும் சனாதன சக்திகளின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இந்த நிகழ்வு சான்று. ராகேஷ் கிஷோரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்ய வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.