Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

'பைசன்' உணர்வுப் பூர்வமான திரைப்படம்- அண்ணாமலை பாராட்டு!

By Christon
23 Oct 2025, 04:40 PM
பைசன் படத்தில் உள்ள பல காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான 'பைசன்: காளமாடன்' திரைப்படத்துக்குப் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணலை தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டியுள்ளார். இந்தியக் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையைத் தத்ரூபமாகக் காட்டியதற்காக அவர் படக்குழுவினரைப் புகழ்ந்துள்ளார்.

படத்தின் வரவேற்பு மற்றும் வசூல்

கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள 'பைசன்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம், வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'உணர்வுப் பூர்வமான படம்'

'பைசன்' திரைப்படத்தைக் கண்ட பிறகு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின் வருமாறு:

"அன்புச் சகோதரர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள, பைசன் - காளமாடன் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு அற்புதமான, உணர்வுப் பூர்வமான திரைப்படத்தைத் தந்திருக்கிறார். அவருக்கும், படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு கிராமத்து இளைஞன், தனது லட்சியத்தை அடைய எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சந்திக்கும் சவால்கள், சமூகம் சார்ந்த சிக்கல்கள் என, அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் சகோதரர் மாரி செல்வராஜ். திரைப்படத்தின் பல காட்சிகளில், உணர்வுப் பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது.

மணத்தி கணேசன் வாழ்க்கை வரலாறு

அர்ஜுனா விருது வென்ற இந்தியக் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை, மிக அற்புதமாக திரையில் தந்திருக்கிறார் சகோதரர் மாரி செல்வராஜ். சாதிக்க விரும்பும் இளைஞனுக்கு, சமூகம் பல வழிகளில் வேலியிட்டாலும், அந்த வேலியின் உயரத்தைத் தாண்டி வளர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான நம் மண்ணைச் சேர்ந்த நாயகனின் வரலாற்றை, மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். மேலும், சமூக ஒற்றுமை வேண்டும் என்ற தனது ஆழ்ந்த விருப்பத்தையும், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வெளிப்படுத்தியிருக்கிறார்.

நடிகர்களுக்கு பாராட்டு

கதாநாயகன் துருவ், இந்தத் திரைப்படத்துக்காகத் தன்னையே அர்ப்பணித்திருப்பதை உணர முடிகிறது. அண்ணன் பசுபதி, லால் ஆகியோரின் நடிப்புத் திறனைக் குறித்து நான் புதியதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அனைத்து நடிகர்களுமே தங்கள் அற்புதமான திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

சகோதரர் மாரி செல்வராஜ், மேலும் பலப்பல அற்புதமான திரைப்படங்களைத் தர வேண்டும். மக்களை ஒன்றிணைக்கவும், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமையவும், சமூகம் சார்ந்த அவரது பயணம் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.