அரசியல்

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: செந்தில் பாலாஜி சகோதரரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்!

By Christon
03 Jul 2026, 11:22 AM
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாரை தனிப்படை போலீசாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரைக் கைது செய்யத் தனிப்படை போலீசார் தங்களது தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் முகாமிட்டுள்ள போலீசார், அசோக் குமாரின் நெருங்கிய வட்டாரங்களை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியை கவிழ்ப்பதற்காகத் தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில், கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். தலைமறைவாக இருக்கும் இவரைக் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தனிப்படை போலீசார் தற்போது கரூர், திருச்சி, கோவை மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆகிய நான்கு முக்கியப் பகுதிகளில் முகாமிட்டு அசோக் குமாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அசோக் குமார் போலீசாரின் பிடியில் சிக்காமல் இருக்க அவரது இருப்பிடங்களை மாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது தற்போதைய நகர்வுகளைக் கண்காணிக்கும் பொருட்டு, அசோக் குமாருக்கு நெருக்கமான நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் மற்றும் உறவினர்களின் முழுப் பட்டியலைத் தனிப்படை போலீசார் சேகரித்துள்ளனர். இந்தப் பட்டியலின் அடிப்படையில், அவரது நெருங்கிய உறவினர்களிடம் போலீசார் தங்களது விசாரணையை அதிரடியாக முடுக்கிவிட்டுள்ளனர். விரைவில் அவர் கையப்படலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.