கடந்த ஜூன் 6-ஆம் தேதி பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தின் முன் பக்க கேட், பின் பக்க கேட் என மாற்றி மாற்றிக் அலைக்கழிக்கப்பட்டு முட்டி மோதி, அக்கட்சிக்குள் நுழைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு. தவெகவில் இணைந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகியும் அவர் இன்னும் தனது சொந்த ஊரான கோவில்பட்டிக்குத் திரும்பாமல் சென்னையிலேயே முகாமிட்டுள்ளார்.
அவரது ஆதரவாளர்கள் அவரை ஊருக்கு வருமாறு அழைத்த போதிலும், தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசிக்காமல் ஊர் திரும்ப மாட்டேன் என அவர் பிடிவாதமாக இருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கடம்பூர் ராஜுவின் வழியைப் பின்பற்றித் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பல அதிமுக முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணையப் பனையூர் நோக்கிப் புறப்படத் தயாராகினர். இதனையறிந்த கடம்பூர் ராஜு, தற்போதைய நிலவரத்தைச் சுட்டிக்காட்டி அவர்களைப் பனையூர் வர வேண்டாம் என அவசரமாகத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
"இங்கு எனக்கே இன்னும் முறையான மரியாதை கிடைக்கவில்லை; பேசாமல் அதிமுகவிலேயே நீடித்திருந்தாலாவது அங்கே நமக்கான மரியாதையாவது மிஞ்சியிருந்திருக்கும்" என அவர் தனது ஆதரவாளர்களிடம் மிகுந்த மனவேதனையுடன் புலம்பி வருவதாக தெரிகிறது.