அரசியல்

என்ன சண்டைக்கு வர்றீங்களா? அமைச்சர் பேச்சால் சலசலப்பு.. டென்ஷனான சபாநாயகர்!

By Christon
11 Aug 2026, 03:30 PM
சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் மீதான விவாதத்தில் ஏற்பட்ட அமளியால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தமிழகச் சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்றைய கூட்டத்தொடரின் போது, நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் மீதான விவாதத்தில் ஏற்பட்ட அமளியால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

நீட் எதிர்ப்புத் தீர்மானம் குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன், காமராஜரின் கல்வி தொலைநோக்குப் பார்வையைக் குறிப்பிட்டுப் பேசினார். கிராமப்புற மாணவர்கள் கல்வி பெற வேண்டும் என்பதற்காகவே அன்று காமராஜர் பாடுபட்டார் என்று கூறிய அவர், இன்று நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் ராகுல் காந்தி போராட்ட களத்தில் நின்று கொண்டிருக்கிறார் எனக் குறிப்பிட்டார்.

அமைச்சர் ராகுல் காந்தி குறித்துப் பேசியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தங்கள் இடத்திலிருந்து எழுந்து நின்று கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து சத்தம் எழுப்பினர்.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களின் இந்த அமளியைக் கண்டு தலையிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அனைவரையும் அமைதியாக அமருமாறு அறிவுறுத்தினார். ஆனால், சிலர் தொடர்ந்து நின்று சலசலப்பில் ஈடுபட்டதால், "ஒழுங்கீனமாக நின்றால் நடவடிக்கை எடுப்பேன்; என்ன அவருடன் சண்டைக்கு வருகிறீர்களா?" எனக் காட்டமான குரலில் எச்சரித்தார்.

அதே நேரத்தில் குறுக்கிட முயன்ற ஆளும்கட்சி உறுப்பினரையும் அமருமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்டார். சபாநாயகரின் இந்த அதிரடி எச்சரிக்கையைத் தொடர்ந்து, அவையில் ஏற்பட்ட சலசலப்பு அடங்கி மீண்டும் விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.