Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

பாகுபலி பாணியில் அதிர்ந்த அரங்கம்.. அண்ணாமலைக்கு ஆரவாரம்

By Jayakumar
08 Jun 2025, 05:05 PM
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெயரை கூறியபோது அமைதியாக இருந்த நிர்வாகிகள், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரை கூறியபோது, கட்சி துண்டுகளை சுற்றியபடி ஆரவாரம் எழுப்பிய சம்பவம் பேசுபொருளானது.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை மைதானத்தில் தமிழக பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அமித்ஷாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம்..

2026 ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் முக்கிய தலைவர்களான தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

அமைதியாக இருந்த பாஜக நிர்வாகிகள்..

இதனைத்தொடர்ந்து, மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் உரையாற்றியபோது, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெயரை கூறியபோது பாஜக நிர்வாகிகள் அமைதியாக இருந்தனர். ஆனால், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரை கூறியபோது பாஜக கட்சி துண்டுகளை சுற்றியபடி ஆரவாரம் எழுப்பி பாஜக நிர்வாகிகள் உற்சாகமாக முழக்கமிட்டனர். பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவரின் பெயரை கூறியபோது அமைதியாக இருந்த நிர்வாகிகள் அண்ணாமலை பெயரை சொன்னபோது உற்சாகமடைந்த நிகழ்வு, இருவரின் ஆதரவாளர்கள் இடையே கோஷ்டி பூசல் உள்ளதோ என கேள்வி எழுந்துள்ளது.