அரசியல்

அண்ணா திமுக டூ அடமான திமுக.. கி.வீரமணி விமர்சனம்

By Christon
28 Jun 2025, 03:28 PM
“அண்ணா திமுக போய், அமித்ஷா திமுகவாக மாறி, தற்போது அடமான திமுகவாக உள்ளது” என கி.வீரமணி அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், செந்துறையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடி அரசு இதழ் நூற்றாண்டு விழா திறந்தவெளி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது “இன்றைக்கு அறையில் அமர்ந்து கொண்டே சிலர் இங்கிருந்து, அங்கு போவர். அங்கிருந்து இங்கு வருவர் என பேசிக்கொண்டுள்ளனர். திமுக கூட்டணியில் இருந்து எவரும் வெளியேற வாய்ப்பு இல்லை. எல்லோரும் இங்கு தான் வருவர். இருக்கின்றவர்களுக்கு சீட்டு கொடுக்க முடியாத நிலையில் திமுக உள்ளது” என்றார்.

மேலும், “மனு தர்மத்தை கொண்டு வருவது தான் மோடியின் ஆட்சி. அதற்குதான் அமித்ஷா பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதற்காகவே நமது ஆட்கள் அவர்கள் காலில் சென்று விழுகிறார்கள். அடிமை சாசனம் செய்கிறார்கள் எனில் இதைவிட வேறு வெட்ககேடு உள்ளதா? சூடு, சொரணை உள்ளதா? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “அறிஞர் அண்ணா திமுகவை ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர். அண்ணா திமுகவை ஆரம்பித்தவர். பிறகு அண்ணா திமுகவும் போய், அம்மா திமுக வந்தது. ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அம்மா திமுக பரவாயில்லை, மோடியா இல்லை இந்த லேடியா என கேட்டார். தற்போது என்ன நடந்தது, மோடி எங்கள் டாடி என்றனர். அண்ணா திமுக போய், அமித்ஷா திமுகவாக மாறி, தற்போது அடமான திமுகவாக உள்ளது” என கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “பெரியார், அண்ணாவை கேவலமாக பேசும் மேடையில் வேடிக்கை பார்த்தது குறித்து கடுமையான கண்டனங்களை தெரிவிக்காதது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பும் நிலையில், அது எங்கள் பிரிவான இந்து முன்னணி நடத்திய நிகழ்ச்சி என சொல்லாது, வேறு ஒருத்தர் நடத்திய கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டோம் என பாஜகவே பின் வாங்குகிறது. ஏனென்றால் பெரியாரை தாங்கும் சக்தி அவர்களுக்கே இல்லை என ஒப்பு கொள்கின்றனர்” என்று அவர் கூறினார்.