தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, இன்று நடைபெறவிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெறும் 53 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, 21 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூடப் பெற முடியாத இந்த மோசமான தோல்வியால், அக்கட்சியின் தலைமை மீது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்தச் சூழலில், தோல்விக்குப் பிறகு முதல்முறையாக இன்று காலை நடைபெறவிருந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
தவெக-விற்கு ஆதரவு அளிப்பதில் இழுபறி
தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டவில்லை. இதனால் தவெக-விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுகவில் இருவேறு கருத்துகள் நிலவி வருவதாகவும், இதன் காரணமாகவே கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்ஜிஆர் மாளிகையில் பரபரப்பு
கூட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தொடர் தோல்விகள் மற்றும் உட்கட்சிப் பூசல்களால் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாகக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.