Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

முற்றிலும் Unsafe Model அரசை நடத்தும் மு.க.ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

By nagalekshmi
15 Feb 2025, 02:16 PM
எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை திமுக நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டம்  பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட  முட்டம் வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். சாராயம் விற்பதை தட்டி கேட்பவர்களை அடித்து கொலை மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய ரெய்டு நடைபெற்றது. இதில்,  சாராய வியாபாரி ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் ராஜ்குமார் ஜாமினில் வெளிவந்துள்ளார். அப்போது, தெருவில் ஏன் சாராயம் விற்கிறீர்கள் என்று கேட்ட 17 வயது சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்ததாக கூறப்படுகிறது. 

இதனை தட்டிகேட்ட முட்டம் வடக்குத் தெருவை சேர்ந்த ஹரிஷ் மற்றும் என்ஜினியரிங் படிக்கும் மாணவன் ஹரிசக்தி ஆகியோரிடம் சாராய வியாபாரிகள் ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் தகறாரில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்களை கத்தியால் சரமாரியாக தாக்கியதில்  ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் தலைமறைவானர்களை வலை வீசி தேடி வருகின்றனர். 

இந்நிலையில், மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.

எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை நடத்தும் திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை. மு.க. ஸ்டாலினுக்கு போட்டோஷூட்டிற்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா?

இதில், இவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, இந்த கொலை வாய்த் தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது என பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா? இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

விளம்பரங்களில் மட்டும் இருக்கும் கவனத்தை , மக்கள் பணியில்  சிறிதாவது செலுத்துமாறு மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.