இந்தியா

'நீங்கள் பாகிஸ்தான் உளவாளி'.. பெண்ணை மிரட்டி ரூ.22 லட்சம் மோசடி

By Jayakumar
18 Jun 2025, 03:28 PM
பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்ப்பதாக மிரட்டி, பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை மும்பை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மும்பை, கிர்காமத்தைச் சேர்ந்த 64 வயது பெண் ஒருவனின் செல்போனுக்கு கடந்த 5 ஆம் தேதி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தன்னை டெல்லி பயங்கரவாத தடுப்புப் பிரிவை சேர்ந்த ஆய்வாளர் பிரேம் குமார் குப்தா என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து அந்த பெண்ணிடம் பேசிய மர்ம நபர், நீங்கள் பாகிஸ்தானுக்கு உளவாளியாக பணியாற்றுவதாகவும், இந்தியாவின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவதாகவும் கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய பாதுகாப்பு விதிமீறல்களுக்காக அந்த பெண் கண்காணிக்கப்படுவதாகவும், ரூ. 50 லட்சம் அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் மிரட்டியுள்ளனர். இந்த வழக்கில் இருந்து தப்பிக்க ரூ. 22 லட்சம் தரும்படி அந்த மர்ம நபர் கூறியுள்ளார்.

மேலும், மிரட்டலுக்கு பயந்துபோன அந்த பெண், மர்ம நபர் அளித்த வெவ்வேறு வாங்கி கணக்குகளுக்கு கடந்த 5 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ரூ.22.4 லட்சம் அனுப்பியுள்ளார். இதனையடுத்து மர்ம நபரிடம் இருந்து அந்த பெண்ணுக்கு எந்த அழைப்பு வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர், தான் சைபர் மோசடியில் சிக்கி பணத்தை இழந்ததை உணர்ந்ததை அடுத்து, மும்பை தென் சைபர் காவல் நிலையத்தில் கடந்த 13 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் வங்கிக் கணக்குகளைக் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மிரட்டி பணம் பறிக்கும் இத்தகைய சைபர் மோசடி வழக்கு மும்பையில் பதிவாகியிருப்பது இதுவே முதல் முறை என்று தென் சைபர் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.