கர்நாடக மாநிலம், பெங்களூருவில் லாரியில் குப்பையை எடுக்கும்போது சாக்கு பையில் பெண்ணின் உடல் இருந்ததை கண்டு தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பெண் கொலை
இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.பெங்களூரு காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணையைத் தொடங்கியது.
சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை விசாரித்த போலீசார், அசாமைச் சேர்ந்த 33 வயதான முகமது ஷம்சுதீன் என்பவரை கைது செய்துள்ளனர்.
முகமது ஷம்சுதீன் 40 வயதான ஆஷா என்ற பெண்ணுடன் ஒன்றரை வருடங்களாக லிவிங் டுகெதர் முறையில் தெற்கு பெங்களூருவின் ஹுலிமாவுவில் ஒரு வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். இருவருக்கும் ஏற்கனவே வேறு ஒருவருடன் தலா இரண்டு குழந்தைகள் உள்ளன. இதனால் தங்களை கணவன், மனைவியாக கூறி பெங்களூருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
சிசிடிவியால் சிக்கினார்
கணவரை இழந்த ஆஷா, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். முகமது ஷம்சுதீனும் திருமணமானவர், ஆனால் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் அசாமில் வசிக்கின்றனர்.
இந்த கொலை வழக்கு குறித்து தெற்கு துணை காவல் ஆணையர் லோகேஷ் ஜகலசர் கூறுகையில், “இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஷம்சுதீன் ஆஷாவை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் இறந்த பெண்ணின் உடலை ஒரு பைக்கில் எடுத்துச் சென்று, குப்பையில் போட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
போலீஸ் விசாரணை
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஷம்சுதீனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். லிவிங் டுகெதர் உறவில் இருந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு குப்பையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.