டெல்லி விமான நிலையத்தில் காவலில் எடுக்கப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கே இருக்கும் இடம் தெரியவில்லை என அவரது கட்சியினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அவருக்குப் பாட்டியின் மறைவுச் செய்தி தெரிவிக்கப்பட்டுச் சொந்த ஊர் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அபிஜீத் திப்கே எங்கே?"
வாக்காளர் பட்டியல் திருத்தக் குளறுபடிகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த மும்பையிலிருந்து விமானத்தில் வந்திறங்கிய CJP தலைவர்கள் அபிஜீத் திப்கே, அசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோரை ஏர் இந்தியா விமானத்திற்குள்ளேயே வைத்து டெல்லி காவல்துறை காவலில் எடுத்தது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த CJP நிர்வாகிகள், "கைதான அபிஜீத் திப்கே எங்கே இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை. அவரை யாராலும் தொடர்புகொள்ள முடியவில்லை. அவரது பாட்டி காலமான தகவலைக்கூடக் குடும்பத்தினரால் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காவல்துறை விளக்கம்
CJP நிர்வாகிகளின் இந்த குற்றச்சாட்டுக்கு இடையே, டெல்லி காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அபிஜீத் திப்கேயின் பாட்டி மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உடல்நலக்குறைவால் காலமான செய்தி அவருக்கு உரிய மரியாதையுடன் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை கூறியுள்ளது.
மேலும், மனிதநேய அடிப்படையில் பாட்டியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவர் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பினால், அதற்கான விமானப் பயண வசதிகளைச் செய்து தரத் தயார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த ஊருக்குப் பயணம்
தற்போது சத்ரபதி சம்பாஜிநகரில் இருக்கும் அவர்கள், பாட்டியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக ஹிங்கோலிக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, டெல்லியில் ஜந்தர் மந்தரை நோக்கிச் செல்ல முயன்ற சுமார் 1,500 ஆதரவாளர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சூழலில், அபிஜீத் திப்கே உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் விடுவிக்கப்படும் வரை போராட்டத்தை வழிநடத்தும் பொறுப்பு அஜின்யா ஷிண்டேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.