இந்தியா

WHATSAPP WEB பயன்படுத்துகிறீர்களா? LOGOUT செய்ய மறந்தால் பேராபத்து பயனர்களே!

By Santhosh V
23 Nov 2026, 08:00 PM
அலுவலகக் கணினியில் WhatsApp Web பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு... தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்ற நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பாலானோரின் அன்றாடத் தகவல் தொடர்புக்கு WhatsApp இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. தனிப்பட்ட உரையாடல்கள் தொடங்கி அலுவலகத் தகவல் பரிமாற்றங்கள் வரை அனைத்திற்கும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கணினியில் வேலை பார்ப்பவர்கள் WhatsApp Web வசதியை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த வசதியே சில நேரங்களில் உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு ஆபத்தாக மாறலாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

WhatsApp Web மூலம் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு!

அலுவலகக் கணினிகள், பொது இடங்களில் உள்ள கணினிகள் அல்லது பலரும் பயன்படுத்தும் சாதனங்களில் WhatsApp Web கணக்கைத் திறந்து பயன்படுத்திவிட்டு Logout செய்யாமல் வெளியேறினால், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு மற்றவர்களின் கைகளுக்குச் செல்லும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) தேசிய சைபர் அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு (NCTAU) பாதுகாப்பு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

அதில், கணினியில் ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டு திறக்கப்பட்ட WhatsApp Web அமர்வு (Active Session) தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தால், அதைத் தவறாகப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத நபர்கள் உங்கள் கணக்கை அணுக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட மெசேஜ்கள் முதல் வங்கி மோசடி வரை... என்னென்ன ஆபத்துகள்?

WhatsApp Web கணக்கு மற்றொருவரின் கட்டுப்பாட்டுக்குச் சென்றால், உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள், தொடர்பு எண்கள் மற்றும் குழுக்களில் பகிரப்படும் தகவல்கள் உள்ளிட்டவை அம்பலமாகலாம்.

இதுமட்டுமின்றி, உங்கள் அடையாளத்தைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு மோசடி செய்திகளை அனுப்புவது, போலியான இணைப்புகளைப் பகிர்வது (Phishing), பண மோசடிகளில் ஈடுபடுவது போன்ற சைபர் குற்றங்களும் நடைபெற வாய்ப்புள்ளது.

குறிப்பாக, அலுவலகம் தொடர்பான ரகசியத் தகவல்கள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் வாட்ஸ்அப் மூலம் பகிரப்படும்போது, அவை தவறான நபர்களிடம் சென்றடையும் அபாயமும் உள்ளது.

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு... அலுவலகக் கணினிகளில் WhatsApp Web வேண்டாம்!

அலுவலகப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் கணினிகளில் WhatsApp Web-ஐ தொடர்ந்து Login செய்து வைத்திருக்க வேண்டாம் என்று பாதுகாப்பு அறிவுறுத்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, அரசு சார்ந்த ரகசியத் தகவல்கள், நிறுவனங்களின் முக்கிய ஆவணங்கள், நிதி தொடர்பான விவரங்கள் மற்றும் பிற முக்கியமான தகவல்களை WhatsApp Web மூலம் கணினிகளில் பரிமாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பணிச்சூழல்களில் WhatsApp Web பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது என்றும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

WhatsApp Web பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்!

1. பயன்படுத்தியதும் Logout செய்யுங்கள்!

அலுவலகம் அல்லது பகிர்ந்து பயன்படுத்தும் கணினிகளில் WhatsApp Web பயன்படுத்தினால், வேலை முடிந்ததும் கட்டாயம் Logout செய்ய வேண்டும். வெறுமனே Browser Window அல்லது Tab-ஐ மூடிவிடுவது போதுமான பாதுகாப்பு அல்ல.

2. Incognito Mode பயன்படுத்தலாம்!

தற்காலிகமாக WhatsApp Web பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், நம்பகமான கணினியில் Incognito அல்லது Private Browsing வசதியைப் பயன்படுத்தலாம். இருப்பினும், இதுவே முழுமையான பாதுகாப்பு அல்ல. பயன்படுத்திய பிறகு கட்டாயம் Logout செய்ய வேண்டும்.

3. பொது இடக் கணினிகளைத் தவிருங்கள்!

இணைய மையங்கள் (Cyber Cafe), பொது கணினிகள், ஹோட்டல்களில் உள்ள Business Centre மற்றும் மற்றவர்கள் பயன்படுத்தும் கணினிகளில் WhatsApp Web Login செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

4. சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்காணியுங்கள்!

நீங்கள் அனுப்பாத செய்திகள் உங்கள் கணக்கிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதா அல்லது உங்கள் நண்பர்களிடமிருந்து எதிர்பாராத பதில்கள் வந்துள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகள் தென்பட்டால் உடனடியாகக் கணக்கின் பாதுகாப்பைச் சரிபார்க்க வேண்டும்.

5. கணினி மற்றும் Browser-ஐ அப்டேட் செய்யுங்கள்!

கணினியின் Operating System, Browser மற்றும் Security Software ஆகியவற்றைத் தொடர்ந்து அப்டேட் செய்ய வேண்டும். தெரியாத இணையதளங்களில் இருந்து கோப்புகளைப் பதிவிறக்கம் செய்வது, சந்தேகத்திற்குரிய Files மற்றும் Cracked Software பயன்படுத்துவது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

ஒரு சிறிய தவறு... பெரிய சிக்கலாக மாறலாம்!

வேலை முடிந்ததும் கணினியை Shutdown செய்துவிடுவது அல்லது Browser-ஐ மூடிவிடுவது மட்டுமே உங்கள் WhatsApp கணக்கைப் பாதுகாக்காது. குறிப்பாக, மற்றவர்களும் பயன்படுத்தக்கூடிய கணினிகளில் Login செய்த கணக்கை முறையாக Logout செய்வதே முக்கியம்.

எனவே, WhatsApp Web பயன்படுத்துபவர்கள், குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள், மத்திய அரசின் இந்த சைபர் பாதுகாப்பு எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாமல் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.