இந்தியா

"நள்ளிரவில் வீடியோ வெளியிட கூடாது.. பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்"- ராகுல் வலியுறுத்தல்!

By Christon
24 Jul 2026, 10:37 AM
மாணவர்கள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட நிலையில், ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோ

இப்பிரச்சனை குறித்து நேற்று நள்ளிரவில் செல்ஃபி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, நீட் வினாத்தாள் கசிவு என்பது லட்சக்கணக்கான மாணவர்களையும் குடும்பங்களையும் பாதித்த வேதனையான சம்பவம் எனக் குறிப்பிட்டார். கடந்த இரண்டரை மாதங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், இவ்வழக்குகளை விரைந்து விசாரித்து தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், முறைகேடுகளைத் தடுக்க புதிய மசோதா நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய முயற்சிப்போம் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

ராகுல் காந்தி பதிலடி

பிரதமரின் இந்த வீடியோ பதிவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். அதில், போராடும் மாணவர்களை அவமதிக்கும் வகையில் நள்ளிரவில் வீடியோ வெளியிடக் கூடாது என்று விமர்சித்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ராகுல் காந்தி, மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.