நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் ‘வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் திருத்த மசோதா, 2026’ மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேறியது. கடந்த வாரமே இம்மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய மசோதா மூலம் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுமுறைகள் சட்டம் (2007), வருமான வரிச் சட்டம் (2025) மற்றும் நிதிச் சட்டம் (2026) ஆகிய மூன்று முக்கியச் சட்டப் பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
பணம் செலுத்துதல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதால், யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்ற அச்சமும் விவாதமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இந்த மசோதா எந்தவித புதிய வரியையோ அல்லது பரிவர்த்தனைக் கட்டணத்தையோ அறிமுகப்படுத்தவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.
யுபிஐ சேவை தொடங்கப்பட்டது முதல் நுகர்வோருக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வருவதை நினைவு கூர்ந்த அவர், இந்திய மக்கள் எந்தவொரு பரிவர்த்தனைக் கட்டணமுமின்றி இந்த டிஜிட்டல் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என உறுதி அளித்தார். மேலும், எதிர்காலத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்பட்டாலும், அச்சுமை பொதுமக்கள் மீது விழாது என்றும், அது பெரிய வணிகர்களிடம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.