இந்தியா

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம்? மத்திய அமைச்சர் விளக்கம்

By Christon
27 Jun 2025, 01:47 PM
இருசக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்கப்போவதாக வெளியான செய்திகள் தவறானவை என்று மத்தியஅமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் வரும் ஜூலை மாதம் முதல் சுங்கச் சாவடிகளில் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனால் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது. மேலும் பல தரப்பினர் இந்த செய்தி உண்மை என எண்ணி விமர்சித்தும் கண்டனங்களை தெரிவித்தும் வந்தனர்.

நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஏற்கனவே சுங்கக் கட்டணம் வசூலித்து வரும் நிலையில், இருசக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்கப்போவதாக வெளியான செய்திகள் தவறானவை என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கப்படும் என்று சில ஊடகங்கள் தவறான செய்திகளைப் பரப்புகின்றன. அப்படியொரு முடிவு மத்திய அரசு முன்மொழியவில்லை. இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்திலிருந்து முழு விலக்கு தொடரும்.

உண்மை அறியாமல் தவறான செய்திகளைப் பரப்பி பரபரப்பை ஏற்படுத்துவது ஆரோக்கியமான ஊடகங்களின் அறிகுறி அல்ல. இதை நான் கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இது குறித்து விளக்கமளித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம், “இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. எதுவும் இல்லை என தெளிவுபடுத்த விரும்புகிறது” என்று தெரிவித்துள்ளது.