Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

விமானம் முறையாகவே பராமரிக்கப்பட்டது - ஏர் இந்தியா சி.இ.ஓ விளக்கம்!

By VASUKI
20 Jun 2025, 06:52 AM
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம் முறையாகவே பராமரிக்கப்பட்டு வந்தது என ஏர் இந்தியா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்து இந்தியா மட்டுமில்லாமல், உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து முக்கிய விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் சி.இ.ஓ கேம்ப்பெல் வில்சன், விபத்துக்குள்ளான விமானம், கடந்த 2023 மார்ச் மாதத்தில் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், டிசம்பரில் மீண்டும் சோதனை செய்ய இருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், விமானத்தின் வலது எஞ்சின், கடந்த மார்ச் மாதத்தில் புதிதாக மாற்றப்பட்டதாகக் கூறிய வில்சன், ஏப்ரலில் இடது எஞ்சின் சரிபார்க்கப்பட்டதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். இதன்மூலம், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், நன்கு பராமரிக்கப்பட்டது எனத் தெரிவித்த அவர், விபத்து தொடர்பான விசாரணை அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான விமானம், அனைத்து நிர்ணயிக்கப்பட்ட பராமரிப்பு நடைமுறைகளின்படியும் சரியாக பராமரிக்கப்பட்டு வந்தது என ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் தொழில்நுட்ப நிலைமை, சீராக பரிசோதிக்கப்பட்டு வந்ததுடன், விமானம் தன்னுடைய பயணத்தை மேற்கொள்ளப்படும் வழக்கமான முன்னேற்பாடுகளும் முறையாக நடந்ததாகவும் அவர்கள் கூறினர்.

இதுமட்டுமின்றி, ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள 33 போயிங் 787 ரக விமானங்களை ஆய்வு செய்ய DGCA உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த கேம்ப்பெல் வில்சன், 26 விமானங்கள் மட்டும் தற்போது வரை ஆய்வு செய்யப்பட்டு, சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள விமானங்கள் ஆய்வுக்கு பின் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதன்மூலம், ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ரக விமானங்கள், DGCA வகுத்துள்ள முழு பாதுகாப்பு நிலைகளை முழுமையாக பூர்த்தி செய்வதாகவும், இதனை DGCA உறுதிபடுத்தியுள்ளதாகவும், ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன் தெரிவித்துள்ளார்.