இந்தியா

"குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்.." இறப்பதற்கு முன்பு மனைவிக்கு மெசேஜ் அனுப்பிய மாலுமி!

By Christon
12 Jun 2026, 08:40 AM
இறப்பதற்கு முன்பு மனைவிக்கு மெசேஜ் அனுப்பிய மாலுமி..
வணிகக் கப்பல் மீது ஓமன் நாட்டுக்கு அருகே அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தலைமை கடல்சார் பொறியாளர் (Chief Engineer) பட்னாலா சுரேஷ் (44) உள்ளிட்ட மூன்று இந்தியர்கள் உயிரிழந்தனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடல்சார் துறையில் பணியாற்றி வந்த சுரேஷ், விபத்து நடந்த கப்பலில் கடந்த 5 மாதங்களாகப் பணியாற்றி வந்தார். தனது பணிக்காலம் முடிந்து இன்னும் சில நாட்களில் வீடு திரும்பவிருந்த நிலையில், கப்பலின் ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுதைச் சரிபார்க்கச் சென்றபோது அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத் துயரச் செய்தி, ஜூன் 24 அன்று வரவிருக்கும் தங்களது 15-ஆவது திருமண நாளைக் கொண்டாடக் காத்திருந்த அவரது குடும்பத்தினரைக் நிலைகுலையச் செய்துள்ளது.

சுரேஷின் மனைவி பார்கவி, தங்களது குடும்பத்தின் தற்போதைய சோக நிலையைத் கண்ணீருடன் விவரித்துள்ளார். "சுரேஷுக்கு தினமும் காலையில் குடும்பத்தினர் அனைவருக்கும் 'குட் மார்னிங்' செய்தி அனுப்பும் பழக்கம் இருந்தது. தாக்குதல் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு, 'குட் நைட்.. குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்' என்று எனக்குக் கடைசி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.

அடுத்த நாள் காலை அவரது 'குட் மார்னிங்' செய்திக்காக நான் நீண்ட நேரம் காத்திருந்தேன். ஆனால், அதற்குப் பதிலாக அவரது மரணச் செய்திதான் வந்தது" என்று அவர் அழுதுகொண்டே கூறினார்.

13 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள், பெற்றோர் மற்றும் ஒரு சகோதரியுடன் வசித்து வந்த சுரேஷ், சமூக ஊடகங்களில் அதிகம் ஆர்வம் காட்டாத, தனிமையை விரும்பும் ஒரு நபர் ஆவார். சமீபத்தில் பேசியபோது கூட, "விமான நிலையம் இப்போது வீட்டை விட்டு இன்னும் தூரமாகிவிட்டது, என்னை அழைக்க சீக்கிரமாகவே புறப்பட்டு வந்துவிடு" என்று மனைவியிடம் நகைச்சுவையாகப் பேசியுள்ளார்.

"நாங்கள் நான்கு பேராக இருந்தோம், இப்போது மூன்று பேராகிவிட்டோம்" என்று குமுறும் பார்கவியின் ஒரே கோரிக்கை, கணவரின் உடலைத் தாயகம் கொண்டு வர அரசு உதவ வேண்டும் என்பது மட்டுமே. தற்போதைய அமெரிக்க முற்றுகையை மீறியதால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) ஒப்புக்கொண்டுள்ளது.