இந்தியா

மனைவி மீது சந்தேகம்: தலையுடன் காவல் நிலையம் வந்த கணவர்-பெங்களூரில் பரபரப்பு

By Jayakumar
07 Jun 2025, 04:54 PM
மனைவியை கொன்று தலையுடன் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ள கணவரின் செயல் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் புறநகர் பகுதியில் சங்கர் (26) –மானஷா வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் தனது மனைவி வேறு ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருப்பதாக சந்தேகத்தின்பேரில் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார் சங்கர்.

மனைவி தலையை துண்டித்த கணவர்

இந்த நிலையில் சங்கர் இன்று காலை ஸ்கூட்டரில் துண்டிக்கப்பட்ட மனைவியின் வந்து காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இதனால் செய்வதறியாமல் நின்ற போலீசார், சங்கரிடம் இருந்த அரிவாள் மற்றும் பெண்ணின் தலையை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் சங்கரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருமணத்தை மீறிய உறவு வைத்திருப்பதாக சந்தேகித்ததால், தனது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அவரது தலையை துண்டித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு அனேகல் தாலுகாவின் சந்தாபுரா அருகே உள்ள ஹீலாலிகே கிராமத்தில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கள்ளக்காதல் விவகாரம்

போலீஸ் விசாரணையில், தம்பதி இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்துள்ளனர். கணவர் சங்கர் கோரமங்கலாவில், மனைவி மானஷா பொம்மசந்திராவில் வேலை செய்து வந்துள்ளார்.சமீபத்தில் தனது மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்ததாகவும், இதனால் அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து அவர் தனது தாய் வீட்டிற்குச் சென்றதாகவும் சங்கர் போலீசாரிடம் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை, இரவு 8 மணியளவில், தனது மகளை ஒரு காரணமாகக் கூறி, சமரசம் செய்து கொள்ள வீடு திரும்பினார். அப்போது திருமணத்திற்குப் புறம்பான எந்தவொரு விவகாரத்திலும் தனக்கு தொடர்பு இல்லை என்றும் அவரது மனைவி சங்கரிடம் மறுத்துள்ளார்.

போலீஸ் விசாரணை

அப்போது தம்பதி இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சண்டையின் போது, சங்கர் அரிவாளை எடுத்து பெண்ணின் தலையை துண்டித்துள்ளார். துண்டிக்கப்பட்ட தலையுடன் ஒரு ஸ்கூட்டரில் காவல் நிலையத்திற்கு பயணம் செய்ததாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், சங்கர் தனது மனைவியை கொல்லத் திட்டமிட்டிருந்ததும், அதனால்தான் அவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கடையில் அரிவாள் வாங்கியதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.