Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

கேரள கடலில் தீப்பிடித்த சிங்கப்பூர் கப்பல்.. வெடித்துச்சிதறும் அபாயம்..!

By VASUKI
11 Jun 2025, 06:06 PM
கேரளக் கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் வான்ஹாய் 503 என்ற சரக்குக் கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு கடற்கரையிலிருந்து மும்பைக்குச் சென்று கொண்டிருந்த வான்ஹாய் 503 என்ற சரக்குக் கப்பல் கேரள பேப்பூர் கடற்கரையிலிருந்து 131 கி.மீ தொலைவில் சரக்குக் கப்பல் தீப்பிடித்த நிலையில், தீயை அணைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

வான்ஹாய் 503 சரக்கு கப்பலில் 22 பணியாளர்கள் இருந்த நிலையில், அவர்களில் 18 பேர் கடலில் குதித்துள்ளனர். அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் இரவு முழுவதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து கப்பலில் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்த நிலையில், கப்பலில் எளிதில் தீப்பற்றும் குளோரோ பார்மேட், டை மெதில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோமைனேட் ரசாயனம் உள்ளதால் தீயைக்கட்டுப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தீப்பிடித்த சரக்குக் கப்பல் தற்போது வரை மூழ்கவில்லை என்றாலும், இதுவரை கப்பலில் இருந்து 20 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளன. கடலோர காவல்படை மற்றும் கடற்படை கப்பல்கள் மற்றும் டோனர் விமானங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இக்கப்பலில் குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம் உள்ளிட்ட தீவாய்ச்சியுடன் கூடிய ஆபத்தான வேதிப்பொருட்கள் இருப்பதால், விரைவில் வெடித்து சிதறக்கூடிய அபாயம் இருப்பதாக கடலோர பாதுகாப்புப் படையினர் (Indian Coast Guard) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வேதிப்பொருட்கள் காற்று, தண்ணீர், மண் மூலமாக பரவியால் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படலாம். மேலும் மனித உடலுக்கும் தீவிர நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் உள்ளது. அதேசமயம், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்திய கடற்படை, கடலோர காவல் படை, தீயணைப்பு படையினர் இணைந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கப்பலில் இருந்த குழுவை மீட்டு கடற்கரையில் பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, கப்பலை வெடிப்பின்றி கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு குழு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், மீனவர்கள் மற்றும் பொது மக்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சுற்றுச்சூழல் மேற்பார்வை அமைப்புகள் மற்றும் மாநில அரசு இது தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.