Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

வீடு புகுந்து முதியவரை கொலை செய்த பெண்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

By Jayakumar
10 Jun 2025, 08:03 AM
ஒடிசாவில் பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 60 வயது முதியவரை, பெண்கள் குழு ஒன்று வீடு புகுந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் உள்ள குய்ஹுரு கிராமத்தில் பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் கம்பா மாலிக் (60 வயது) என்பவரை, பெண்கள் குழு ஒன்று வீடு புகுந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து 8 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கம்பா மாலிக் மண்டை ஓடு, எலும்புகள் மற்றும் சாம்பலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை செய்த மோகனா காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் பசந்த் குமார் சேத்தி கூறியதாவது, "காம்பா மாலிக் (வயது 60) என்ற நபர் காணமால் போனதாக அவரது குடும்பத்தினர் கடந்த 3 ஆம் தேதி புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து, போலீசார் அவரை தேடியபோது குய்ஹுரு கிராமத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வனப்பகுதியில் அவர் எரித்து கொலை செய்யப்பட்டார் என்று தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த கிராமத்தில் சென்று விசாரணை செய்தபொது 8 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், 6 பெண்கள் கம்பா மாலிக்கால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானோம் என்று தெரிவித்தனர். கம்பா மாலிக்கின் மனைவி 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததாகவும் அதிலிருந்த இவர் அந்த கிராமத்தில் உள்ள பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறினர்.

மேலும், இத்தகைய தொடர்ச்சியான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே குழுவாக இணைந்து, அவர் வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்ததாக அவர்கள் கூறினார்கள்" எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து, கஜபதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜதிந்திர குமார் பாண்டா கூறுகையில், "பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்கள் காவல்துறையின் உதவியை நாடவோ அல்லது இறந்தவருக்கு எதிராக எந்தப் புகாரும் அளிக்கவோ இல்லை" என்று தெரிவித்தார்.