Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

பாலியல் வன்கொடுமை வழக்கு.. பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி.. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

By VASUKI
01 Aug 2025, 06:06 PM
மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா தனது வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தள (ஜெ.டி.எஸ்) கட்சியின் முன்னாள் எம்.பியும், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரனும், ஹசன் மக்களவை தொகுதியின் முன்னாள் பிரதிநிதியுமான பிரஜ்வல் ரேவண்ணா, வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகச் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராகத் தற்போது மூன்று பாலியல் வன்கொடுமை வழக்குகள் மற்றும் ஒரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு என மொத்தம் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.

ரேவண்ணாவின் குடும்பத்துக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் உதவியாளராக இருந்த 48 வயது பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு விசாரணை கடந்த மே 2-ம் தேதி தொடங்கியது. நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் வழக்கை விசாரித்து வந்தார். மூத்த வழக்கறிஞர்கள் அசோக் நாயக் மற்றும் பி.என். ஜெகதீஷா ஆகியோர் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை தினசரி நடைபெற்று வந்த நிலையில், இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்து, பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை குற்றவாளியென இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தண்டனைகுறித்து வாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தண்டனை தொடர்பான வாதங்கள் தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் நாளை (ஆகஸ்ட் 2) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு அரசியல், சட்டம் மற்றும் சமூக நீதியின் பரப்பளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், தீர்ப்புகுறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிகழ்ந்துள்ளது.