இந்தியா

ரூ. 60,990 காலி.. கேமரா ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

By Christon
23 Feb 2026, 05:22 PM
ஆன்லைன் ஷாப்பிங் செயலியில் 60,990 ரூபாய் மதிப்புள்ள கேமரா ஆர்டர் செய்தவருக்கு 2 பாக்கெட் சோப் பவுடர் வந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து உள்ளது.
சார்ஜாவைச் சேர்ந்த தொழிலதிபரான ஆல்பிரட் என்பவர், கடந்த ஒரு வாரமாக கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கி வருகிறார். அவர் தனது நெருங்கிய நண்பருக்குப் பரிசளிப்பதற்காக, பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனம் ஒன்றில் ரூ. 60,990 மதிப்பிலான கேமராவை ஆர்டர் செய்திருந்தார்.

பார்சலுக்குள் இருந்த ஏமாற்றம்

நேற்று அவருக்கு அந்த நிறுவனத்திடமிருந்து பார்சல் வந்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆல்பிரட் அந்தப் பார்சலைப் பிரித்துப் பார்த்தபோது அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கேமரா இருக்க வேண்டிய அட்டைப் பெட்டிக்குள், அதற்குப் பதிலாக அரை கிலோ எடை கொண்ட இரண்டு சோப் பவுடர் (சலவைத்தூள்) பாக்கெட்டுகள் மட்டுமே இருந்தன. சுமார் 61 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மின்னணுப் பொருளுக்குப் பதிலாக சலவைத்தூள் வந்ததைக் கண்டு அவர் நிலைகுலைந்து போனார்.

நிறுவனத்தின் அலட்சியம்

இது குறித்து உடனடியாக அந்த ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் ஆல்பிரட் புகார் அளித்தார். ஆனால், அவரது புகாருக்கு அந்த நிறுவனம் முறையான பதில் அளிக்கவில்லை என்றும், மிகவும் அலட்சியமாகச் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குபவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றுமொரு உதாரணமாக அமைந்துள்ளது.