இந்தியா

ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம்.. எதிர்க்கட்சி தலைவர்களை கூண்டோடு அள்ளிய காவல்துறை!

By Christon
10 Oct 2026, 04:04 PM
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க முயன்ற எதிர்க்கட்சி தலைவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தில் பங்கேற்க முயன்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான மமதா பானர்ஜி, டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி காவல்துறை கைது செய்து காவலில் எடுத்துள்ளது.

மத்திய டெல்லியின் சவுத் அவென்யூ பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மமதா பானர்ஜியை, பேருந்தின் மூலம் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். தனது வாயில் கருப்பு பிளாஸ்டர் ஒட்டிப் போராட்டத்தை பதிவு செய்த மமதா பானர்ஜி, "அரசு எங்களிடம் தவறாக நடந்து கொள்கிறது; மக்களின் குரலை வலுப்படுத்த 'இந்தியா' கூட்டணி தொடர்ந்து போராடும்" என்று காவல் பேருந்திற்குள் இருந்து வீடியோ செய்தி மூலம் தெரிவித்துள்ளார். டேரிக் ஓ பிரையன், டோலா சென் உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களும் அவருடன் காவலில் வைக்கப்பட்டனர்.

காலை முதலே வீட்டைச் சுற்றி காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், வீட்டை விட்டு வெளியேறி போராட்டத்தில் இணைய முயன்ற போது பிடிபட்டார். அதேபோல, கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சத்ரசால் மைதானத்தில் உள்ள தடுப்புக் காவலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மாணவர் தலைவர்கள் பலரும் இந்த நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. நேற்று (அக்.09) மாலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்த ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள், தேர்தலில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து முறையிட்டு, தேர்தல் ஆணையரின் ராஜினாமாவை வலியுறுத்தினர்.