பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திர மாநில செய்தித் தொடர்பாளரும், திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை வாரிய உறுப்பினருமான ஜி. பானுபிரகாஷ் ரெட்டி, நடிகர் பிரகாஷ் ராஜ் மீது குற்றவியல் புகார் ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
தனது வழக்கறிஞரும், பாஜக சட்டப் பிரிவு உறுப்பினருமான கே. அஜய் குமாருடன் திருப்பதி முதல் வகுப்பு நான்காம் கூடுதல் நீதிமன்றத்தில் அவர் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி. பானுபிரகாஷ் ரெட்டி, ஏப்ரல் 17 அன்று, சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றைப் பார்த்ததாகவும் அதில், கேரளாவில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் நடிகர் பிரகாஷ் ராஜ், ராமர், லட்சுமணன் மற்றும் ராமாயணம் குறித்து இழிவான மற்றும் வன்மம் நிறைந்த தூண்டிவிடும் வகையிலான கருத்துகளை தெரிவித்ததாக குற்றம்சாட்டினார்.
அந்த கருத்துகள் இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், பிரகாஷ் ராஜின் பேச்சு மத நல்லிணக்கம் மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும், இந்து சமூகத்தின் நம்பிக்கைகளை அவமதிக்கும் செயல் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனவே, நீதிமன்றம் இந்த புகாரை பரிசீலித்து, நடிகர் பிரகாஷ் ராஜ் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.